மாற்றுத் திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்களை தேர்வு செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் சுயசார்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட அவர்களுக்கு தேவையான பல்வேறு உதவி உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. நாட்டில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகள் தாங்கள் விரும்பும் உதவி உபகரணங்களின் வகை மற்றும் மாதிரிகளை தாங்களே தேர்வு செய்யவும் அதற்கான நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் அரசு அறிமுகம் செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் (Physically Challenged)
உபகரணங்கள் தேர்வு செய்யும் திட்டத்தில் 9.50 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி,மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டி ஆகிய ஐந்து வகையான பொருட்கள் 7219 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகள் தேர்வு செய்யும் உபகரணத்திற்கான கூடுதல் தொகையை அவர்களின் சொந்த பங்களிப்பு அல்லது நன்கொடையாளர் வழங்கினால் அரசு ஏற்கிறது. குறுகிய காலத்தில் 554 பேர் தங்களுடைய விருப்ப பொருட்களை தேர்வு செய்து அதற்கு 6.27 லட்சம் ரூபாயை தங்கள் பங்கு தொகையாக செலுத்தி உள்ளதாக மாற்று திறனாளிகள் நல கமிஷனர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு நன்றி (Thanks to Government)
இது குறித்து தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு அரசுக்கு நன்றி தெரிவித்து மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து அமைப்பின் பொருளாளர் கருணாகரன் கூறியதாவது: இந்தியாவில் முதன் முறையாக மாற்றுத் திறனாளிகள் தங்கள் விருப்பப்படி உபகரணங்களை தேர்வு செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
இந்த திட்டம் மற்ற மாநிலங்கள் மற்ற நாடுகளிலும் செயல்படுத்த உகந்த திட்டம். இது குறித்து அரசுக்கும் ஆணையருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளோம்.
மேலும் படிக்க
Share your comments