காற்றில் ஒப்பு ஈரப்பதம் அதிகரிப்பு காரணமாக பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதிகமாக வியர்க்கும்
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 60 முதல் 80 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும், தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும், பருத்தி ஆடைகளையே அணியவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 7ம் தேதி வரை கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்பகல் 12.00 முதல் பிற்பகல் 04;00 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஏனைய மாவட்டங்ளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
வளிமண்டலத்தில் 1 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் சுழற்சியின் காரணமாக இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறன்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Share your comments