கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி பகுதியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணத்தைத் தெரிந்து விவசாயிகள் உருகி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகில் உள்ள குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். விவசாயியான இவர் இன்று காலையில் தன் தோட்டத்திற்கு வைத்திருந்த மருந்தையும், விஷத்தையும் கலந்து குடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். ராஜசேகர் விவசாயத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அண்மைக்காலமாக அவருக்கு விவசாயத்தில் போதிய மகசூலும், லாபமும் இல்லை. இருந்தாலும், விவசாயத்தை விடாமல் செய்து வந்தார்.
இந்நிலையில் இவரது விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்காக ராஜசேகருக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது, வங்கியில் விவசாயக் கடன் பெற்று அந்தப் பணத்தை விவசாயத்தில் போடலாம் என முடிவு செய்தார். இந்த முடிவை தன் வீட்டிலும் சொன்னார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு விவசாயம் லாபகரமாக இல்லை எனவும், அதனால் வங்கியில் விவசாயக் கடன் பெறுவதற்கான நில ஆவணங்களைத் தரமுடியாது எனவும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதனால் தன்னால் விவசாயம் செய்ய இயலாது என மனம் உடைந்து ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டார். குமரி விவசாயியின் இந்த சோக முடிவு குறித்து கொற்றிக்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:
Share your comments