தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அறுவடைக்கு பின் விளைபொருட்கள் செய்நேர்த்திக்கு இயந்திரங்கள் வாங்க 60% வரை மானியம் வழங்கப்படும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வேளாண் உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ண குமார் கூறியதாவது, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் (National Agricultural Development Program) கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் அறுவடைக்கு பின் விளைபொருட்கள் செய்நேர்த்திக்கு இயந்திரங்கள் வாங்க 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைக்கவும், சேமித்து வைக்கும் காலத்தை நீட்டிக்கவும், விளைபொருட்களை செய்நேர்த்தி செய்வது அவசியமாகிறது. இதற்கு, முறையான தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
அதற்கு வேளாண் பொறியியல் துறை மானிய திட்டத்தில், பருப்பு உடைக்கும் இயந்திரம், சிறுதானியங்களில் உமி நீக்கும் இயந்திரம், எண்ணெய் பிழியும் செக்குகள், கதிரடிக்கும் இயந்திரங்கள், தோல் உரிக்கும் இயந்திரங்கள், கொதிக்க வைக்கும் இயந்திரங்கள், சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் இயந்திரங்களுக்கு மானியம் பெறலாம்.
அனைத்து தோட்டக்கலைப் பயிர்கள், உணவுப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். தனிப்பட்ட விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், விவசாயக் குழுக்கள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் தொழில்முனைவோர் மானியம் பெறலாம்.
அதிகபட்சமாக, 50 சதவீத மானியமும், ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் பயனாளிகளுக்கு அதிகபட்சமாக, 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மானிய தொகையை, மத்திய அரசு, 60 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீதம் வழங்குகின்றன. திட்டத்தில் பயனடைய விரும்புவோர், பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் அமைந்துள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என, உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!
பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!
Share your comments