தமிழகம் முழுவதும் இடைத்தரகர்கள் இன்றி தாலுகா வாரியாக காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. காய்கறி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விட்டால், விலையின்றி காய்கறிகள் சாலையில் கொட்டப்படுவதை தடுத்து, விவசாயிகளை காக்க முடியும்.
நஷ்டம்
தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி, தமிழக அரசுக்கு காய்கறிகள் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். காய்கறிகளை உற்பத்தி செய்கின்ற விவசாயிகளிடம் பொது மார்க்கெட்டில் மிக குறைவான விலைக்கு வாங்கி, 4 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதில் விவசாயிகள் பெருத்த நஷ்டம் (Loss) அடைகிறார்கள். பொதுமக்களும் அதிக விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், பாரபட்சமில்லாமல் ஒரு நிர்ணய விலையை வைத்து தமிழக அரசு கொள்முதல் நிலையங்களை ஆரம்பிக்கவேண்டும். தற்போதைய நிலையில் விவசாயிகளின் உற்பத்தி செலவு, பல மடங்காக உயர்ந்து விட்டது.
விளைவித்த பொருளுக்கு சரியான விலை இல்லாத காரணத்தினால் தான், காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
காய்கறி கொள்முதல் நிலையங்கள்
தமிழக அரசு ஒவ்வொரு தாலுகா வாரியாக கொள்முதல் நிலையங்களை அமைத்தால் விவசாயிகளும், அங்கு சென்று அந்த கொள்முதல் நிலையத்தில் உற்பத்தி செய்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இல்லாமலும், கமிஷன் அடிப்படையில்லாத முறையிலும், நியாயமான விலையில் விற்க முடியும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி அரசு காய்கறி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.
தாலுகா வாரியாக கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு அரசுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் உள்ளன.வாடகை கட்டிடம் தேவை இல்லை. பொது மக்களுக்கும் எந்த சிரமமும் இல்லாமல் காய்கறிகளை அங்கன்வாடி மையத்திலும் ரேஷன் கடைகளுக்கு (Ration Shops) அருகிலும் நகர்ப்புற மக்களைக் கொண்டு விற்பனை செய்வதற்கு முயற்சி எடுத்தால், பலருக்கு மறைமுக வேலையும் கிடைக்கும். ஆகையால், விரைந்து காய்கறி கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
கட்டுப்பாடுகளுடன் உர விற்பனை நிலையங்கள் திறக்க அனுமதி!
Share your comments