இராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசன பகுதியில் 2-ம் போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகை தண்ணீர்
இராமநாதபுரம் நகரை சுற்றிய பகுதிகளின் விவசாய தேவையையும், தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்யும் ஒரே நீர் ஆதாரம் பெரிய கண்மாய் ஆகும். பருவமழை நன்றாக பெய்யும் சமயங்களிலும், வைகை தண்ணீர் கடைசிவரை வந்து சேரும் தருணங்களிலும்தான் இந்த பெரிய கண்மாய் நிறைந்து விவசாயம் செழித்து வருகிறது. பெரும்பாலான காலங்களில் இந்த கண்மாயில் தண்ணீர் தேக்க வழியில்லை, பாதுகாப்பில்லை என்ற காரணங்களை கூறி தண்ணீரை கடலில் கலந்துவிட செய்வதுதான் இதுநாள் வரை நிலவி வருகிறது.
நெல் விவசாயம் (Paddy Farming)
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தநிலையில் பெரிய கண்மாய் வேகமாக நிரம்பியது. அப்போது வைகை அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டு சேமிக்க முடியாமல் 4 கண்மாய் அளவிலான தண்ணீர் கடலில் கலந்து வீணாகியது. பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனர். அந்த தண்ணீரை பயன்படுத்தி கண்மாயின் பாசன பரப்பான 3 ஆயிரத்து 962 ஏக்கரில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நெற்பயிர்கள் தண்ணீர் நன்றாக இருந்தால் விளைந்து அறுவடை முடிந்து தற்போது வைக்கோல் எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கை (Request)
இந்த சூழ்நிலையில் பெரியகண்மாய் பாசன நீரை பயன்படுத்தி இந்த ஆண்டு 2-ம் போக விவசாயம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் பாலசுந்தரமூர்த்தி கூறியதாவது:- கண்மாயில் தற்போது 4 அடி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இந்த ஆண்டு ஏறத்தாழ 800 ஏக்கருக்கு மேல் 2-ம் போக சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. இதுதவிர, பருத்தி, மிளகாய் பயிர்களும், பயறுவகைகளும் விவசாயிகள் போட்டு வருகின்றனர். இதற்கு தற்போது உள்ள தண்ணீர் முழுமையாக போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து முதல் தடவை மட்டும்தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதன்படி பார்த்தால் நமது மாவட்டத்திற்குரிய தண்ணீர் இன்னும் எடுக்கப்படாமல் வைகை அணையில் உள்ளது. அதனை 2-ம் போக சாகுபடிக்காக அரசு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்துவிட வேண்டும். இதன்மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதோடு கோடை காலத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் குறையாமல் தண்ணீர் தேவை பூர்த்தியாகும்.
மேலும் படிக்க
விலை உயர வாய்ப்புள்ளதால் மக்காச்சோளத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்!
Share your comments