கொரோனா ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் ரோஜா சாகுபடிக்கு (Rose Cultivation) உரம், பூச்சிக்கொல்லி விலையை குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரோஜா சாகுபடி
ஓசூர் தாலூகாவில் திறந்த வெளியிலும், பசுமை குடில்கள் அமைத்தும் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகை நாட்களிலும், ஆங்கில புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் அலங்காரம் செய்வதற்காக உள்ளூர் வியாபாரிகள் ரோஜா பூக்களை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். இதனால் ரோஜா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிகளவில் லாபம் ஈட்டி வந்தனர்.
விலை அதிகரிப்பு
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்ய முடியாமலும், வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சர்வதேச விமான போக்குவரத்து, கோவில் திருவிழாக்களுக்கு தடை, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக சாகுபடி செய்த ரோஜாக்களை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சில விவசாயிகள் ரோஜாக்களை பறித்து, அதனை குப்பைகளில் வீசி செல்லும் அவல நிலையும் உள்ளது. இதுதவிர பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. மேலும், உரம், பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்வும் ரோஜா பூ சாகுபடி செய்யும் செலவை அதிகரித்துள்ளது.
கோரிக்கை
ரோஜா பூக்கள் விற்பனை ஆகாமல், அதன் சாகுபடி (Cultivation) விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் (Loss) ஏற்பட்டு வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் உரம், பூச்சிக்கொல்லி விலையை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், ரோஜா பூ சாகுபடிக்கு பசுமை குடில்கள் அமைக்க வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
மதுரையில் மானியத்துடன் 887 எக்டேர் சாகுபடிக்கு அழைப்பு!
குறுமிளகு கொடிகளில் நோய்த் தாக்குதலைத் தடுக்க மருந்து தெளிக்கும் விவசாயிகள்!
Share your comments