மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதி தென்னை சார்ந்த விவசாய பணிகள் நடைபெறக்கூடிய பகுதி உள்ளது. இங்கு சுமார் 77 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் (Coconut Farm) செய்யப்படுகிறது. அதிகளவு தேங்காய்கள் விளைவதால் தேங்காய்கள் கொள்முதல் (Purchase) செய்யப்பட்டு வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வந்தது.
பொய்த்தது பருவமழை
இந்தநிலையில் கடந்த 8 வருடங்களாக பருவ மழை பொய்த்ததால் நிலத்தடி நீர் (Ground water) மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்து கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கால்வாய் பாசனம், ஏரி பாசனம் இல்லாமல் முற்றிலும் பருவமழையை நம்பியே உள்ளன. தென்னை விவசாயிகள் பிள்ளையை போல் பேணி காத்து வந்த தென்னை மரங்கள் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சியால் (Drought) கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் லட்சக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அகற்றிவிட்டனர். இதனால் தேங்காய் உற்பத்தி (Coconut Production) வெகுவாக குறைந்து விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.
தேங்காய் விலை குறைவு:
கொரோனாவுக்கு (Corona) முன்பு வரை சந்தையில் 1 தேங்காயின் விலை 15 ரூபாய் வரை விலை இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் 7 ரூபாய் வரை விலை குறைந்து தற்போது 9 ரூபாய் வரை விலை போவதால் தென்னை விவசாயிகள் கடும் விரக்தி அடைந்து உள்ளனர். கொட்டாம்பட்டி பகுதிகளில் தேங்காய் குடோன்கள் அமைத்து மொத்தமாக அறுவடை (Harvest) செய்து கொண்டுவரப்படும் தேங்காய்கள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முழுமையாக சென்றடைய முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதாலும், கூலி, செலவு உள்ளிட்டவைகளால் தேங்காய் வருமானத்தால் ஈடுகட்ட முடியவில்லை என தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கொள்முதல் மையம்
தென்னை விவசாயிகள் அதிகம் உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அரசே நேரடி கொள்முதல் செய்ய கொட்டாம்பட்டி பகுதியை தேர்வு செய்து, கொள்முதல் மையம் (Purchasing Center) செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொட்டாம்பட்டி பகுதிகளில் தென்னை சார்ந்த கயிறு தயாரிக்கும் தொழில் உள்ளிட்டவற்றை நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மானாவாரிப் பயிர் நிவாரணத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்! வருவாய்த்துறை தகவல்!
வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற சிறகு அவரைக்காய்! தென்னையில் வாடல் நோயைக் கட்டுப்படுத்துமா?
Share your comments