சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நேற்று (28.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்னையின் பூச்சி மேலாண்மை குறித்து காணொலிக்காட்சியின் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஆட்சியரின் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் , சேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
வண்டல் மண் எடுக்க அனுமதி:
விவசாயப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வண்டல் மண் எடுப்பதற்கு உரிய ஏரிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் அவற்றில் இருந்தும் வண்டல் மண் எடுக்க புதிதாக அனுமதி வழங்கப்படும்.
தென்னை பூச்சி மேலாண்மை:
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்னையின் பூச்சி மேலாண்மை குறித்து காணொலிக்காட்சியின் மூலம் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. சமீப காலமாக தென்னையில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறித்தும், கருந்தலைப்புழு, ரூகோஸ் சுருள்வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டாமிருக வண்டு போன்ற பூச்சிகளின் தாக்குதல் குறித்தும், பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக காணொலிக்காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
கருந்தலைப்புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் பிராக்கனிட் ஒட்டுண்ணிகளை அயோத்தியாபட்டணம் வட்டாரத்தில் உள்ள சுக்கம்பட்டி தென்னை ஒட்டு சேர்ப்பு மையத்திலும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் கிரைசோபா அல்லது அப்படோக்கிரைசா ஆஸ்டர் என்ற இரைவிழுங்கிகளை சீலநாயக்கன்பட்டியில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்திலும் பெற்றுப் பயனடையலாம். கோடைக்காலங்களில் தென்னைகளின் பூச்சி மேலாண்மை முறைகளை விவசாயிகள் முறையாக செய்து தங்கள் தென்னைகளைப் பூச்சிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
தூர்வாரும் பணிக்கு குழு நியமனம்:
சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைக்கட்டுகளின் வரத்து வாய்க்கால்களில் மழைக்காலங்களில் மழைநீர் வரும்பொழுது, மழைநீரில் மணல் மற்றும் மண் கலந்து வருவதால் வாய்க்கால்களில் மண் திட்டுகள் உருவாகின்றன. எனவே, மண் படிவங்களை முறையாக அகற்றி தூர்வாரப்படவில்லை எனில் ஒவ்வொரு வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளிலும் தண்ணீர் உரிய நேரத்தில் கடைமடை வரை சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 13,496.31 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 31 எண்ணிக்கையிலான சிறப்பு தூர்வாரும் பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 03.05.2023 முதல் தோராயமாக 10.06.2023 வரை மேற்கொள்ளப்படவுள்ளன. கோடை காலத்திலேயே இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, உழவர் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இத்தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இப்பணிகளைக் கண்காணிக்க தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் இல.சுப்பிரமணியன் சிறப்புக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் 250-க்கும் மேற்பட்ட வகையிலான பாரம்பரிய நெல் இரகங்கள்மற்றும் காய்கறிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப., பார்வையிட்டார்.
photo courtesy: salem district collector twitter
மேலும் காண்க:
Share your comments