ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த மூன்று மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 100 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சென்னையிலுள்ள ஆவின் தலைமையகத்தின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெறும் எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”ஒரு லிட்டர் தண்ணீரை 20 ரூபாய்க்கும், ஒரு குவாட்டர் 140 ரூபாய்க்கும் விலை கொடுத்து வாங்கும் மக்கள் இருக்கும் மாநிலத்தில், பால் விற்பனை விலையை ஏற்றினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தவறான கருத்தை சொல்லி தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வருகிறது” என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
ஆவின் நிறுவனத்தை சார்ந்திருக்கும் 8 லட்சம் விவசாயிகள்:
”தமிழ்நாட்டில் தினசரி இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் ஆவின் நிறுவனம் மட்டுமே சராசரியாக 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது, 20 லட்சம் உறுப்பினர்கள் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தற்போதைய சூழலில் சராசரியாக 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிறு - குறு விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கி வருவது ஆவின் நிறுவனம் மட்டுமே ஆகும்.
ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் விவசாயிகளின் நலனை காப்பதற்காக தமிழ்நாடு அரசு லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து வழங்கி வருகிறது. மாதந்தோறும் வழங்க வேண்டிய ஊக்கத்தொகை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் என தாமதமாக வழங்குவதால், விவசாயிகளும், பால் கூட்டுறவு சங்கங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் பால் கூட்டுறவு சங்க செயலர்களிடம் தினசரி ஊக்கத்தொகை வரவு வைக்காதது குறித்து சண்டையில் ஈடுபடுவதும், தகராறு செய்வதுமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் கடந்த மூன்று மாத காலமாக தமிழ்நாடு அரசு வழங்கி வரும் லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படாததேயாகும்.
நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை- முதல்வருக்கு கோரிக்கை:
கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் குவாரிகளில் இறக்கும் தொழிலாளர்களுக்கு மூன்று லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு, பால் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் மூன்று மாதமாக நிறுத்தி வைத்திருப்பது கடுமையான வருத்தத்திற்குரிய செயலாகும்.
எனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களும் விரைந்து நிலுவையில் உள்ள 100 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு காக்க தவறினால் வேறு வழியின்றி ஆவின் தலைமையகத்தின் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்பதையும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
சமவெளிப்பகுதியில் மிளகுடன் ஜாதிக்காய் சாகுபடி- அசத்திய புதுக்கோட்டை விவசாயி!
மாடித் தோட்டம் அமைக்கப் போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
Share your comments