
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை அறிவிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் போட்டு வருகிறது. விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்கிறது.
கடந்த 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.38,904 கோடி வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25ம் நிதியாண்டில் மொத்த வேளாண் பட்ஜெட் மதிப்பீடு ரூ.42,281.88 கோடி ஒதுக்கப்பட்டது. 2023-2024-ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2024-25 நிதியாண்டில் ரூ.3,377 கோடி இது அதிகம்.
விவசாய உதவி தொகை கோரிக்கை:
இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை போல் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் வருகிற 15ம் தேதி தமிழக சட்டப்பையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான தயாரிப்பில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வேளாண் பட்ஜெட்டில் என்னவெல்லாம் இடம் பெற வேண்டும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழக அரசு பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் விவசாயிகள் வைத்த கோரிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.
விவசாயத்தை நம்பி இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை போல், அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மாதந்தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விலையில்லா அல்லது மானிய விலையில் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல தனி பஸ்கள் மற்றும் கொரியர் சேவைகள் அறிமுகம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் வைத்துள்ளனர்.
அதன்படி, விவசாயிகள் நலனைப் பேணும் வகையில் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயம் செய்யும்போது உயிரிழந்தால் ரூ.25 லட்சம் வழங்கும் சிறப்பு திட்டம் ஆகியவை விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக இருந்தன.
இதுதவிர இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம், உரக்கடை வைக்க மானியம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4400, நெல் குவிண்டாலுக்கு ரூ.3100 சத்தீஸ்கர் மாநிலத்தில் வழங்கப்படுவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கைகளை தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read more:
மார்ச் 5-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு
Share your comments