சிவசேனா கட்சியின் பிரமுகரும், மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை அமைச்சருமான அப்துல் சத்தார் “விவசாயிகள் தற்கொலை” என்பது புதிதல்ல. பல ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அப்துல் சத்தர் தனது சொந்த மாவட்டமான சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். அப்போது "விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. பல ஆண்டுகளாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். தற்கொலையால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வேளாண் ஆணையர் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளேன். வேளாண் அமைச்சராக இருக்கின்ற நான் பருவமழையால பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று பார்த்தேன், சேதம் பெரிதாக எதுவும் இல்லை. மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலைகள் எங்கும் நடக்கக்கூடாது. பயிர் சேதமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க உறுதியான நடவடிக்கையினை மேற்கொள்வோம். பயிர் சேத பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கை இன்னும் சமர்பிக்கப்படவில்லை, அனைத்து சேதங்களின் விவரமும் இறுதி அறிக்கையில் இணைக்கப்படும்” என அமைச்சர் சத்தர் கூறினார்.
வேளாண் அதிகாரிகள் தங்கள் பயிர் சேத அறிக்கையில் சத்ரபதி சம்பாஜிநகரிலுள்ள சோய்கான் தாலுகாவை குறிப்பிடாமல் விலக்கியுள்ளனர். அதனடிப்படையில் அமைச்சர் பருவமழை காரணமாக பயிர் சேதம் அப்பகுதியில் இல்லை என்கிறார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இணையங்களில், எதிர்கட்சிகள் தரப்பில் அமைச்சர் குறிப்பிட்ட ”விவசாயிகள் தற்கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல” என்ற கருத்துக்கு பலத்த எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
அமைச்சர் சத்தர் இதற்கு முன்பும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். எம்பி சுப்ரியா சுலேவை விவரிக்க மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் கடும் சர்ச்சையில் சிக்கினார். இதேப்போல் கடந்த ஆண்டு, ஆதித்யா தாக்கரேவை "சோட்டா பப்பு" என்று சத்தார் வர்ணித்திருந்தார். இதற்கும் பலத்தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை குறித்த மகாராஷ்டிரா மாநில அரசு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், ஏக்நாத் ஷிண்டே ஆட்சியின் கீழ் கடந்த ஏழு மாதங்களில் 1,203 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே ஆட்சியின் கீழ் இரண்டரை ஆண்டுகளில் 1,660 விவசாயிகள் இறந்துள்ளனர். 2014 மற்றும் 2019-க்கு இடையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது 5,061 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் தரவுகளின் படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 7,444 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைச்சரின் கருத்தும் அமைந்துள்ளது.
மேலும் காண்க:
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர்
ஆஹா.. ஊரை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.13,600 தரும் நாடு
Share your comments