மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வந்ததையொட்டி மீனவர்கள் ஆர்வமுடன் கடலுக்கு சென்றனர்.
மீன் பிடி தடை காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இக்காலக்கட்டங்களில் தமிழகத்தின் திருவள்ளுவர் மாவட்டம் ஆரம்பாக்கம் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் வரை உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் 28 குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை கொண்ட படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 28 குதிரை திறனுக்கு குறைவான நாட்டு படகுகள், பைப்பர் படகுகள், கட்டுமரங்கள் கொண்டு மீன்பிடிக்க தடை இல்லை.
இந்த மீன் பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஏற்பட்டு உள்ள சிறு, சிறு பழுதுகளை சரிசெய்தல், சேதம் அடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
முடிவுக்கு வந்த மீன் பிடி தடை காலம்
இந்நிலையில், கடந்த 14ம் தேதியுடன் மீன் பிடி தடை காலம் முடிவுக்கு வந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை முதலே கடலுக்கு செல்ல துவங்கினர். கொரோனா ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சுழற்சி முறையில் 120 படகுகள் கடலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 102 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
கடலுக்கு சென்ற காசிமேடு மீனவர்கள்
இதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று இரவு முதல் கடலில் மீன்பிடிக்க சென்றனர். முன்னதாக, மீன்பிடிக்க தேவையான ஐஸ் கட்டிகள், உணவு பொருட்கள், வலைகள், டீசல் ஆகியவற்றை தயார் செய்தனர். 61 நாட்கள் கழித்து மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் எனவும், மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க....
மண்ணைக் குளிர்விக்கும் கோடை மழை- உழவு செய்தால் கோடி நன்மை!
தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!
Share your comments