மண்ணை கண்ணியத்துடன் பொலபொலபாக்கி, பொதுநல நோக்கத்துடன் பயிரிட்டு, கண்ணும் கருத்துமாகக் காத்து, விளைவிக்கும் விவசாயியும் ஒரு பிரம்மாதான். இருப்பினும் சில இயற்கை பேரிடர்களின்போது, இந்த பிரம்மாக்களின் வாழ்வு சூனியமாகிவிடுகிறது.
அந்த வகையில், தற்போதைய கொரோனா நெருக்கடி விவசாயிகள் வாழ்விலும் புயலை அடிக்கச்செய்துள்ளது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஓடிவந்து உதவுகிறது ஆந்திர அரசு. இலவசப் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளை அணைத்துக்கொள்ள ஆதரவுகரமும் நீட்டுகிறது.
ஒய்எஸ்அர் ரிது தினோத்சவம் (YSR Rythu Dinotsavam)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த ஆண்டும், இலவச பயிர்க்காப்பீடு திட்டமான ஒய்எஸ்அர் ரிது தினோத்சவம் (YSR Rythu Dinotsavam) அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
ரூ.1 செலுத்தி முன்பதிவு
இந்த திட்டத்தின்படி விவசாயிகள் வெறும் ஒரு ரூபாய் செலுத்தி, இலவச பயிர்க்காப்பீடுத் திட்டத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். அனைத்து பயிர்களுக்கும் இந்த திட்டத்தில் காப்பீடு வழங்கப்படுகிறது. இதன்படி, ஏதேனும் இயற்கை பேரழிவின்போது பயிர்கள் சேதமடைந்தால், காப்பீடு மூலம் அரசு இழப்பீடு வழங்கி, அவர்களது நஷ்டத்தை சரிக்கட்டும்.
இதன்மூலம் தனது விவசாயப் பணியை எவ்விதத் தாமதமும் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயி மேற்கொள்வது உறுதி செய்யப்படுகிறது. ஒய்எஸ்அர் ரிது தினோத்சவம் திட்டத்தில், கடந்த 2018ல் 17 லட்சம் விவசாயிகளும், 2019ம் 26 லட்சம் விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.
தமிழக அரசும் அமல்படுத்துமா?
இத்தகைய சிறப்பான திட்டத்தை தமிழக அரசும் கொண்டுவந்தால், இம்மாநில விவசாயிகளும் பயனடைவார்கள். தமிழக அரசு முன்வரவேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க...
விவசாயிகளின் வாரிசுகளுக்கு சிறந்த வாய்ப்பு - மாதத்திற்கு 2 லட்சம் வரை ஊதியம்!
Share your comments