வெங்காய இருப்பு 3 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 5 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் என்.சி.சி.எஃப் சார்பில் வெங்காயத்தை சில்லறை விலையில் கிலோவிற்கு ரூ. 25 க்கு விற்கும் என மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்தின் விலை உள்நாட்டு சந்தைகளில் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை ஒன்றிய அரசு சனிக்கிழமை விதித்தது. இந்த வரி விதிப்பானது டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிலோ வெங்காயத்தை ரூ.25 என்கிற அளவில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
வெங்காயத்தின் கொள்முதலானது 3.00 லட்சம் மெட்ரிக் டன் இலக்கை எட்டிய பின்னர், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5,00 லட்சம் மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறையானது என்.சி.சி.எஃப் மற்றும் நாஃபெட் ஆகியவற்றுக்கு தலா 1.00 லட்சம் டன் கொள்முதல் செய்து கூடுதல் கொள்முதல் இலக்கை அடையவும், கொள்முதல் செய்யப்பட்ட இருப்புகளை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து பொது மக்களுக்கு விநியோகிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 மெட்ரிக் டன் வெங்காயத்தினை சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய சந்தைகளுக்கு அனுப்பவதை தவிர, இருப்பிலிலுள்ள வெங்காயத்தை சில்லறை நுகர்வோருக்கு ஒரு கிலோ ரூ.25/- என்ற மானிய விலையில் இன்று முதல் (21 ஆகஸ்ட் 2023) சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தக்காளி விலை உயர்ந்த நிலையில் இதை நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம் கொள்முதல் செய்தல், இலக்கு நிர்ணயித்து இருப்பு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்ய இயலும் என அரசு நம்புகிறது. அதே வேளையில் நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் மலிவு விலையில் தொடர்ந்து வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் இயலும் என தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மாதந்தோறும் 38 சதவீதமும், ஆண்டுக்கு ஆண்டு 37 சதவீதமும் அதிகரித்த காய்கறி விலையின் கணிசமான அதிகரிப்பால் பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
ஆட்டம் காணும் உள்ளூர் சந்தை- வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி!
Share your comments