குற்றாலம் அருவியில் குளிக்க காத்திருந்த சுற்றுலா பயணிகளின் காத்திருப்பு காலம் நிறைவடைந்தது, இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை தொடர்ந்து, இதற்காக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி தலைமையில், பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
8 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல், வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குற்றாலத்தில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
தென்காசி மாவட்டத்தின், பிரதான சுற்றுலா தளமான குற்றாலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வில் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், தொற்று பரவல் காரணமாக மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம் மார்கழி மாதத்திலும், மக்கள் குற்றாலத்தில் குளிக்க குவிந்துள்ளனர். மேலும் இதில் ஐயப்ப பக்தர்கள் பெரும் அளவில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடதக்கது.
குற்றால மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஒரே நேரத்தில் 10 பேரும், பெண்கள் பகுதியில் ஒரு நேரத்தில் 6 பேரையும் அனுமதிக்கின்றனர். ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தலா 10 பேரும், பழைய குற்றாலம் அருவியில் ஆண்கள் பகுதியில் 5 பேரும், பெண்கள் பகுதியில் 10 பேரையும் அனுமதிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும், அதாவது தனிமனித இடைவெளியை கடைபிடித்து நிற்க வரையப்பட்ட வட்டங்களில் நின்று செல்லவேண்டும். மேலும் இங்கு வருவோர் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம், அருவிப் பகுதிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments