எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கும் நிலையில், மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று வணிக ரீதியான சிலிண்டரின் விலையினை ரூ.25 வரை உயர்த்தியுள்ளன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்த்தப்படாது என கருதிய வணிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் உள்நாட்டு 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போதைய விலை நிலவரம்:
உயர்த்தப்பட்ட சமீபத்திய விலை உயர்வின் படி, டெல்லியில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் சில்லறை விலை ₹1,795 ஆக உள்ளது. மும்பையில் இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ₹1,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் கொல்கத்தாவில், வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை முறையே ₹1,960 மற்றும் ₹1,911 ஆக உயர்ந்துள்ளது.
2024- இரண்டாவது முறையாக விலை உயர்வு:
இந்தாண்டு வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவது இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும். முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதி, 19 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ₹14 வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில், 19 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை முறையே ₹1,769.50 (டெல்லி), ₹1,887 (கொல்கத்தா), ₹1,723 (மும்பை), மற்றும் ₹1,937 (சென்னை) ஆக இருந்தது.
இதைப்போல், இந்தியாவின் முக்கிய பகுதிகளில் விலை நிலவரம் பின்வருமாறு-
- சண்டிகர்- ₹1,816
- பெங்களூரு - ₹1,875
- இந்தூர்- ₹1,901
- அமிர்தசரஸ்- ₹1,895
- ஜெய்ப்பூர்- ₹1,818
- அகமதாபாத்- ₹1,816
(குறிப்பு: மேற்கூறிய விலைகள் Indane இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இது விநியோகஸ்தர்களைப் பொறுத்து மாறுபடலாம்.)
எண்ணெய் நிறுவனங்கள் வணிக எரிவாயு சிலிண்டர் விலையை 1 டிசம்பர் 2023 அன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ₹21 வரை உயர்த்தின. அதன் பின்னர், 2024 புத்தாண்டுக்கு முன்னதாக, 19 கிலோ வணிக சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ₹39.50 வரை குறைக்கப்பட்டது.
வீட்டு சிலிண்டர்களின் விலை என்ன?
14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விலை கடைசியாக ஆகஸ்ட் 30, 2023 அன்று மாற்றப்பட்டது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையானது டெல்லியில் ரூ.903-க்கும், கொல்கத்தாவில் ரூ.929-க்கும், மும்பையில் ரூ.902-க்கும், சென்னையில் ரூ.918.50-க்கும் கிடைக்கிறது.
மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
Read more:
எதிர்ப்பாராத விபத்தால் மங்கிய வாழ்வை மீட்ட பெண் விவசாயி சங்கீதா பிங்கலேயின் வெற்றிக் கதை!
Share your comments