தீபாவளி பண்டிகை (Deepavali) நெருங்கி வரும் நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் வெல்லம் (Jaggery) தயாரிப்பில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
வெல்லம் உற்பத்தி
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில் பாரம்பரியமாக வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மண் வளம் காரணமாக, இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம், சுவையும், மணமும் நிறைந்ததாக உள்ளது. பத்து மாத வளர்ச்சி பெற்ற கரும்பு அறுவடை (Sugarcane Harvest) செய்யப்பட்டு, வயல்வெளியில் விவசாயிகள் சொந்தமாக அமைத்துள்ள கரும்பு ஆலைகளில், வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, ஜனகராஜகுப்பம், கதனநகரம், ஆனந்தவல்லிபுரம் உள்ளிட்ட பகுதியில் வெல்லம் தயாரிப்பு அதிகளவில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம், சென்னை மற்றும் ஆந்திர மாநிலம், சித்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அறுவடை காலம் துவங்கியதும், தொடர்ந்து மூன்று மாதத்திற்கு வெல்லம் தயாரிப்பு நடைபெறும். இந்த காலக்கட்டத்தில், வயல்வெளியில் வெல்லம் ஆலை அமைத்து, அதன் ஒரு பகுதியில் விவசாயிகள் தங்களின் குடும்பத்தினருடன் தங்கி இருந்து, வெல்லம் தயாரிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
கரும்பு அறுவடை
கரும்பு அறுவடை (Sugarcane Harvest), கரும்பு கட்டுகளை ஆலைக்கு கொண்டு வருதல், சாறு பிழிதல், பாகு காய்ச்சுதல், பாகு பக்குவப்படுத்துவது, வெல்லம் உருண்டைகள் தயாரிப்பு என, பல்வேறு விதமான பணிகளில் குடும்பத்தினருடன் மூன்று மாதத்திற்கு உழைக்க வேண்டும். இந்த கூட்டு முயற்சி இருந்தால் மட்டுமே வெல்லம் தயாரிக்க முடியும். தற்போது, 1 கிலோ வெல்லம், 45 ரூபாய் என ஆலைகளில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வெளி சந்தையில், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.வெல்லம் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். மூன்று ஆண்டுகளாக வெல்லம் கொள்முதல் விலை தொடர்ந்து, 45 ரூபாய் என்ற விலையில் தான் உள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு வருவாய் கிடைக்கவில்லை. பாரம்பரியமாக செய்துவரும் தொழிலை விட மனம் இன்றி, தொடர்ந்து செய்து வருகிறேன்.
ஏ.என்.குமார்,
வெல்லம் உற்பத்தியாளர்
ஆனந்தவல்லிபுரம்.
Share your comments