வெயிலின் தாக்கத்தில் தண்ணீர் இன்றி, தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும் என பள்ளி மாணவர்களிடம் தன்னார்வ இளைஞர்கள் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். கோடையில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு செல்லும் சூழலில், மனிதர்களால் கூடத் தாங்க முடியவில்லை. இதை போல, வெயிலின் தாக்கத்தால் பறவைகள், வனவிலங்குகள் உயிரிழப்புகள் வரை செல்லுகிறது. இந்நிலையில், பறவைகளின் உயிரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில், பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதை தன்னார்வலர்கள் பலரும் பொதுமக்களிடம் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
பறவைகளுக்கு தண்ணீர் (Water for Birds)
தஞ்சாவூரில் அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சேர்ந்த இளைஞர்களான சதீஸ்குமார், வின்சென்ட், பாரதி ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக, மண்ணில் செய்யப்பட்ட சட்டியை வழங்கி வருகின்றனர். அதன்படி, தஞ்சாவூர் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் மாணவர்களுக்கு, மண்சட்டியை வழங்கினார். இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர், மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் கூறியதாவது; தற்போது கோடையால் பறவைகள் தண்ணீர் இன்றி தவிப்பதை தடுக்க பொது இடங்களிலும், வீடுகளிலும் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு மண்சட்டி வழங்கப்படுகிறது.
இதுவரை தஞ்சாவூரில், 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 500 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வைக்கும் போது, மாணவர்கள் அதை மொபைலில் படம் எடுத்து வைத்துக்கொள்ள கூறப்பட்டுள்ளது. அதன் மூலம் பறவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தங்கள், சான்றிதழ் பரிசாக வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க
Share your comments