1. செய்திகள்

கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் விடியலைத் தாருங்கள்!

Dinesh Kumar
Dinesh Kumar
Give Dawn to the Teachers.....

கடந்த ஏப்ரல் 4 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பு, ஏறத்தாழ பத்தாயிரம் ஆசிரியர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசை நோக்கி அழுத்தமாக வைக்கச் செய்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாமல், கடந்த 12 ஆண்டுகளாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

2009-ல் ஒன்றிய அரசு கொண்டுவந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவு, பள்ளிகளில் பணியமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்கள் 60% மதிப்பெண்களோடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என்று கூறுகிறது. 15.11.2011-ல் அன்றைய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இந்த உத்தரவைக் கறாராக நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்தார். அவரின் உத்தரவு நடைமுறைக்கு வந்த நாளுக்கு முன்பு பணியில் அமர்த்தப்பட்டவர்களும் இந்தக் கத்தியின்கீழ் கொண்டுவரப்பட்டார்கள். உத்தரவுக்கு முன்பே பணிநியமனம் செய்யப்பட்டவர்களை அந்த உத்தரவு எப்படிக் கட்டுப்படுத்தும் என்ற அடிப்படையான ஒரு கேள்வியின் நியாயத்துக்கு இன்னும் யாரும் காதுகொடுக்கவே இல்லை. எப்படியாவது நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு அந்த ஆசிரியர்களும் தங்களது பணியைத் தொடர்ந்தார்கள்.

இவ்வாறு பணியாற்றிவந்த ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட், 2012-ல் பணிவிடுப்பு செய்யப்பட்டார்கள். உயர் நீதிமன்றம் சென்று இதற்குத் தடையாணை பெற்று மீண்டும் பணியில் தொடர்கிறார்கள். அந்தத் தடையாணையும் உயர் நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. அந்த ரத்து ஆணைக்கும் தடையைப் பெற்றே இப்போதும் அவர்கள் பணியில் தொடர்கிறார்கள்.

ஆனால், அடிப்படை ஊதியம் தவிர, வளரூதியம், ஈட்டிய விடுப்பை ஒப்படைத்துக் காசாக்குதல் உள்ளிட்ட எந்த ஊதியப் பயன்களையும் இவர்கள் அனுபவிக்க இயலாதவர்களாகவே இருக்கிறார்கள். அவ்வப்போது உயர்த்தித் தரப்படும் பஞ்சப்படி மட்டுமே இவர்கள் அனுபவிக்கும் ஊதியப் பயன்.

தமிழ்நாட்டுக்கு விடியலைத் தருவதாய்ச் சொல்லும் இந்த அரசு, தங்களுக்கும் விடியலைத் தரும் என்ற எதிர்பார்ப்போடு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையை அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்தான் இப்படியொரு உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது.

2011-க்கு முன்பே பணியில் சேர்ந்துவிட்ட ஆசிரியர் ஒருவர், தமக்குத் தகுதித் தேர்வுப் பிரச்சினை இல்லை என்று கருதி, தமக்கான வளரூதிய நிலுவையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தடையிலிருந்து விடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவர்மீதும்கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்குத் தகுதியான கல்வியைக் கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்கள் அவசியம் என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்து சரியானதே. இவர்கள் தங்களது பணிக்காலத்தில் பாடக் குறிப்புகளை எழுதுவது இல்லை என்றோ போதிய தயாரிப்போடு வகுப்புக்கு வருவதில்லை என்றோ மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் வகுப்பெடுப்பதில்லை என்றோ குறைந்தபட்சம், மற்ற ஆசிரியர்கள் அளவுக்குச் சிறப்பாக வகுப்பெடுப்பதில்லை என்றோ இதுவரை எந்தப் புகாரும் இல்லை.

இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் வெற்றிபெறவில்லையே தவிர, உரிய கல்வித் தகுதியையும் கற்பித்தல் அனுபவத்தையும் பெற்றவர்கள். மாநில அரசு நினைத்தால், ஒரு தெளிவான கொள்கை முடிவை எடுத்து, இந்த ஆசிரியர்களின் வாழ்விலும் விடியலைத் தந்துவிட முடியும். நிலுவைத் தொகைதான் பிரச்சினை என்றால், அரசு அது குறித்து அந்த ஆசிரியர்களுடன் பேசி ஒரு தீர்வையும் எட்டலாம்.

மேலும் படிக்க:

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு?

புதிய கல்வி கொள்கை 2019: கஸ்துரி ரங்கன் தலைமையிலான நிருபர் குழு பரிந்துரை: தேசிய கல்வி ஆணையம் அமைக்க திட்டம்

English Summary: Give dawn to the teachers who Teach! Published on: 13 April 2022, 11:57 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.