பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தில் பல சலுகைகள், சிறப்பு பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு யோசனைகளை கையாண்டு வருகின்றனர். அதனடிப்படையில் இங்கு ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் யுக்தி வைரலாகியுள்ளது. அதாவது, 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் ஒரு காட்சியில், 50 பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டாம் என்று பரோட்டா கடை ஒன்றில் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கும். இந்த ஆஃபரை பார்த்த நடிகர் சூரி 50 பரோட்டாவையும் சாப்பிட்டுஅந்த போட்டியை வெல்வார். அந்த திரைப்படம் மூலம் தான் அவர் பரோட்டா சூரியாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்ததிரைப்படத்தின் காட்சியையே சிறிது மாற்றத்தோடு தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியாணி கடை ஒன்று செய்துள்ளது. ஆனால் இந்த சலுகைக்கு பரிசுத்தொகை சற்று அதிகம். தூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி சலுகை ஒன்றை அறிவித்தது. அது என்ன தெரியுமா, 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடித்தால் அந்த நபருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். மேலும் இதற்குப் 'பரோட்டா திருவிழா' என்று பெயர் வைத்துள்ளார் கடை உரிமையாளர்.
சோறு போட்டு தங்கமும் குடுக்கிறாங்கனு சொன்ன சும்மா இருப்பாங்களா நம்ப ஆளுங்க? உடனே இதனை அறிந்த தூத்துக்குடி இளைஞர்கள் நான், நீ என போட்டி போட்டு பரோட்டா திருவிழாவில் பங்கேற்க வருகின்றனர். இதையடுத்து இந்த போட்டியில் கலந்துகொண்ட அருண் பிரகாஷ் என்ற வாலிபர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிட்டு போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அருண் பிரகாஷுக்கு கடை உரிமையாளர்கள் அறிவித்தபடியே தங்க நாணயத்தை பரிசளித்தார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் கண்ணா பாண்டியன் கூறுகையில், "எங்களது கடையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம் என்றும் அந்த வகையில் 'பரோட்டா திருவிழா' நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் அறிவித்தோம். இதற்குத் தூத்துக்குடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்கள்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
Share your comments