பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ போல், விவசாயிகளுக்காக ”Kisan Ki Baat “ (கிசான் கி பாத்) என்கிற பெயரில் வானொலி வாயிலான நிகழ்வு மாதம் ஒருமுறை நடத்தும் வகையில் விரைவில் தொடங்கப்படும் என ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (ஆக-15) சுதந்திர தின நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விவசாயிகளுடனான உரையாடல் மற்றும் தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பை (NPSS) துவக்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சில புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
Kisan Ki Baat:
நிகழ்வில் பங்கேற்று விவசாயிகள் மத்தியில் உரையாடிய அமைச்சர் சிவராஜ் சிங் கிசான் கி பாத் என்கிற வானொலி வாயிலான நிகழ்வு விவசாயிகளுக்காக விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார். அதுக்குறித்து அவர் தனது உரையில் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு-
”விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வுகளை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளையும், விஞ்ஞானிகளையும் இணைப்பதே எங்கள் வேலை. பல நேரங்களில், விவசாயிகளுக்கு தகவல் தெரியாததால், தவறான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் மகசூல் இழப்பு,பொருளாதார நெருக்கடியினை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். அறிவியலின் பலன்களை விவசாயிகள் உடனடியாகப் பெறுவதை உறுதிசெய்ய, மாதம் ஒருமுறை (Kisan Ki Baat) ” கிசான் கி பாத்” என்ற திட்டத்தை விரைவில் தொடங்குவோம்."
இந்த நிகழ்ச்சி வானொலியில் வரும், அதில் விஞ்ஞானிகள், வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குவார்கள்."
கிருஷி விக்யான் கேந்திராவை (KVK- வேளாண் அறிவியல் மையம்) முழுமையாக விவசாயிகளுடன் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. விவசாயிகளுக்கு அறிவியல் பூர்வமான பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி விரைவில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்களும், விவசாயிகள் மத்தியில் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன, இதன் மூலம் விவசாயத் துறையில் குறிப்பிடத்தக்க அதிசயத்தை நாம் நிகழ்த்த முடியும்” என்றார்.
விளைபொருட்களுக்கு உரிய ஆதரவு விலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு செவிசாய்க்காத அரசின் மீது விவசாயிகள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மண் ஆரோக்கியம், நீர்ப்பாசனம், பயிர் மேலாண்மை மற்றும் பூச்சி கட்டுப்பாடு போன்ற தலைப்புகளில் விஞ்ஞானிகள் வானொலி நிகழ்வில் உரிய ஆலோசனைகளையும், தீர்வுகளையும் வழங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read more:
விவசாயிகளுக்கு உதவும் 5 வகையான உரமிடும் முறைகள்- முழு விவரம்!
Share your comments