பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் தமிழக அரசு விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்த நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கென ரூ.11,982 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்த்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளநிலையில், நேற்று துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல்வேறு நிதி ஒதுக்கீடு, மானியம் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி
அண்மையில், நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி விவசாய பயிர்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில், பயிர்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேளாண் துறைக்கு 11,982 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்பாசனத்திற்கு 6,453 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
விவசாயத்துறை திட்டங்கள்
குடிமராமத்து மற்றும் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள் மூலம் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண் தொழில் செழிக்க நுண்ணீர்ப் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப் பண்ணையம், வேளாண் விற்பணை மையங்கள் மேம்பாடு, பயிர் காப்பீட்டுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் சீரிய முறையில் செயல்படுத்தப்படும் என்றும் ஓ.பி.எஸ் கூறினார்.
கால்நடைத்துறை
விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அதிமுக ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கால்நடைத் துறையின் பங்கும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தான் கால் நடைகளுக்கு நடமாடும் அம்மா அவசர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
பேரிடர் நிவாரணம் அதிகரிப்பு
தமிழகத்தை தாக்கிய நிவர், புரேவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, மழை காரணமாகவும் அதிகளவு பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இயற்கை பேரிடர் பாதிப்புக்கான 1 ஹெக்டேருக்கான நிவாரண தொகை 13,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்
மேலும் படிக்க...
TNAU துணைவேந்தருக்குச் சிறந்த துணைவேந்தர் விருது!!
வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!
Share your comments