டெல்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்டு ஊருக்கு திரும்பிய விவசாயிகளுக்கு பஞ்சாப், ஹரியானா நெடுஞ்சாலையில் உள்ள கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 40 விவசாய சங்கத்தினர் டில்லி எல்லையில் மூன்று இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் 26ல் போராட்டத்தை துவக்கினர்.
சொந்த ஊர் திரும்பிய விவசாயிகள்
இந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து, அதற்கான மசோதா பார்லிமென்டில் (Parliament) நிறைவேறியது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உட்பட விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுள்ளது. இதையடுத்து ஓராண்டுக்கு மேலாக நீடித்த போராட்டத்தை கைவிட்டு சொந்த ஊர் திரும்புவதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.
அதன்படி டெல்லி எல்லையில் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டிராக்டர்கள், டிராலிகளில், படுக்கை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் விவசாயிகள் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டனர்.
வாகனங்களில் தேசியக் கொடியும் (National Flag), விவசாய சங்கக் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தன. சில டிராக்டர்கள், விளக்குகள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
சிறப்பான வரவேற்பு
டில்லி - ஹரியானா, டில்லி - பஞ்சாப் நெடுஞ்சாலைகளில் வழியெங்கும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பூக்களை துாவியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்றனர். பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல இடங்களில் பாரம்பரிய நடனங்கள் ஆடியும், இனிப்புகள் வழங்கியும் விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
விவசாயிகள் திரும்புவதை அடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை சீர்செய்வதற்காக பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திருந்தன. இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் படிக்க
விவசாயிகளை அச்சுறுத்தும் ஆப்பிரிக்க நத்தைகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?
தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பயிற்சிகள்: தேதி உள்ளே!
Share your comments