27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், வழக்கமாக மழைநீர் தேங்கும் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தற்போது மழைநீர் தேங்கவில்லை. தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐடி கம்பெனிகள் நிறைந்திருக்கும் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் என வேலைக்கு செல்வோர் பலரும் அவதியுற்றனர்.
கனமழை காரணமாக, கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரில் கார் ஒன்று சிக்கியது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும், தமிழ்நாட்டினை பொறுத்த வரை இன்று ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையினை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க்கப்பட்டுள்ளது. கடும் வெயில் காரணமாக கோடைக்கால விடுமுறை நீடிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கனமழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கனமழை காரணமாக ஜூன் மாதத்தில் 1996 ஆம் ஆண்டு கடைசியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி ஆணையர் விடுத்த உத்தரவு:
சென்னை சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய தனி கவனம் செலுத்த வேண்டும். சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த உபகரணங்களுடன் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 19.17 அடியை நீர்மட்டம் எட்டியுள்ளது. நேற்று ஒரே இரவில் சென்னை மீனாம்பாக்கம் பகுதியில் அதிகப்பட்சமாக 137 மிமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலைய பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இலங்கை, சிங்கப்பூர், மஸ்கட், துபாயிலிருந்து சென்னை வந்த விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
ஓட்டுக்கு பணம்- விஜய்யின் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதியின் ரியாக்ஷன்
Share your comments