தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்திலுள்ள 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில தினங்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தினைப் பொறுத்தவரை தமிழகத்தில் அதிகப்பட்சமாக களியல், பாப்பிரெட்டிப்பட்டி, காட்பாடி, திற்பரப்பு பகுதியில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்பாக அறிக்கையினை சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்.
11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13.10.2023 முதல் 17.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை; ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். தென் மேற்கு பருவமழைக்கான காலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்திற்கான மழைப்பொழிவு ( அக்டோபர் 1 முதல் தற்போது வரை) இயல்பை விட 42 சதவீதம் வரை குறைவாகவே பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
ரேசன் கடைக்கு பொருள் வாங்க குடும்பத்தோடு வரணுமா? அமைச்சர் விளக்கம்
கார்டு மேல இனி அந்த 16 நம்பர் இருக்காதா? ஆக்ஸிஸ் வங்கி அசத்தல்
Share your comments