தமிழகத்தின் பல மாவட்டங்களில், வரும் 4 ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையும், நீலகிரி, கோவையில், நாளை முற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்று சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
4ம் தேதி வரை
தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும். இன்று முதல் வரும் 4ம் தேதி வரை, பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கேரள, கர்நாடகா கடலோரம், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடுமுறை
இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments