Heavy rain with thunder in most parts of Tamil Nadu today and tomorrow
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை மழை பதிவாகியுள்ள நிலையில், இன்று மற்றும் நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகப்பட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளதாகவும், ஈரோட்டில் அதிகப்பட்சமாக 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இதனையடுத்து இன்று மற்றும் நாளை (மே-3) தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் இடி, மின்னலுக்கு வாய்ப்புளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
02.05.2023:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
03.05.2023:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.05.2023 முதல் 06.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
02.05.2023 மற்றும் 03.05.2023: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா - தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
pic courtersy: AFP/hindusthan times
மேலும் காண்க:
Share your comments