அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், நான்கு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் சில நாட்களாக கன மழை கொட்டுகிறது. இதனால், பல இடங்களில் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கனமழை (Heavy Rain)
மலைப்பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதேபோல், அண்டை மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசத்திலும் கன மழை கொட்டுகிறது. அங்கும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் (Orange Alert)
கேரளாவிலும் கன மழை பெய்து வருகிறது. இங்கு, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களில், ஆறு முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு, ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் ஐந்து நாட்களுக்கு பரவலாக பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தான் பருவ மழை துவங்கும். ஆனால் இந்த ஆண்டு, மே 27ம் தேதியே பருவ மழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், இங்கு ஏற்கனவே கன மழை பெய்து வருவதால், தேசிய பேரிடர் மீட்பு படையின் ஐந்து குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெயில் குறையும் (Reduced Heat)
கடந்த சில நாட்களாக டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. டில்லியில் அதிகபட்சமாக 49 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், இங்கு வரும் நாட்களில் வெப்பம் படிப்படியாக குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
தீவிரமாகும் வெப்ப அலை: எச்சரிக்கை விடுத்தது சுற்றுச்சூழல் அமைப்பு !
தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்!
Share your comments