கனமழை எச்சரிக்கையால் நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட த்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி தாலுகாவிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர். இதைப்போல், கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில், கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி. சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணமில்லா இலவச உதவி எண்: 1913, வாட்ஸ் அப் எண்: 9445477205
நாகை மாவட்டத்தில் இடைவிடாது 16 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக வேளாங்கண்ணியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செ.மீ, கடலூரில் 12 செ.மீ, பரங்கிப்பேட்டை பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மறு தேதி https://dte.tn.gov.in/Homepage என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1 மணியளவிலான வானிலை முன்னறிவிப்பில் செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுத்துறை, நாகைப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர்-16-ல் மேற்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பிஎம் கிசான் பணம் வரவு தேதி அறிவிப்பு
சென்னை மற்றும் டெல்டா பகுதி உட்பட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Share your comments