சென்னை மாநகரப் பகுதிகளில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகரில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சாலை விபத்துகளை ஆய்வு செய்ததில் இரு சக்கர வாகன விபத்துகளில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 477 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த 134 பயணிகளும் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததற்காக உயிரிழந்துள்ளனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் சென்ற 2,929 பேரும், பின் இருக்கையில் அமர்ந்து சென்ற 365 பேரும் காயமடைந்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களில் இருசக்கர வாகனங்களில் சென்ற 841 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதில் 741 இரு சக்கர வாகனங்களும், 127 பேர் பின் இருக்கையில் பயணித்தவர்களும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழப்பதையும், காயம் அடைவதையும் குறைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இன்று (மே 23) முதல் சிறப்பு வாகன சோதனை நடத்தப்படுகிறது.
மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர், இரு சக்கர வாகனத்தில் ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் இருப்பவர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறினார்.
மேலும், “ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஹெல்மெட் கட்டாய உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என 312 சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:
குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!
ஹெல்மெட் அணியாததன் விளைவு: உலக அளவில் 10 லட்சம் பேர் இறப்பு!
Share your comments