தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு சில தினங்களாகவே அநேக மாவட்டங்களில் நல்ல கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மழை பெய்து வரும் இடங்களில் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு எடுக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் மதியம் 1 மணி வரையில் கீழ்க்காணும் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு.
இந்நிலையில் நேற்றைய தினம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
16.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.10.2023 முதல் 21.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற தமிழ்நாடு வெதர்மென் தனது X வலைத்தள பக்கத்தில், தென் மற்றும் மேற்கு தமிழக பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு இன்று மிகச்சிறந்த நாள் (நல்ல மழைப்பொழிவு) என கூறிப்பிட்டுள்ளார். தென் தமிழகத்தில் உள்ள அணைகள் விரைவாக நிரம்பும் எனவும், சென்னையில் மிதமான மழையினை அடுத்த 2 நாட்களுக்கு எதிர்ப்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
பருத்தி மற்றும் தென்னை விவசாயிகள் இதை கொஞ்சம் பாருங்க
மறைந்த கும்கி யானைக்கு மூர்த்தி என்கிற பெயர் வந்தது இதனால் தானா?
Share your comments