வீட்டுவசதி வாரிய திட்ட பகுதிகளில், 19 ஆயிரத்து 558 வீடு, மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளதாக, துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நந்தனத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய பழைய தலைமை அலுவலகம் மற்றும் அதன் எதிரில் உள்ள கட்டடம் அமைந்துள்ள நிலங்களை பயன்படுத்தி, வர்த்தக மையம் கட்டப்பட உள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை, தொழில்நுட்ப காரணங்களால் நடைமுறைபடுத்த முடியவில்லை.
தற்போது, மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, சாத்தியக்கூறுகள் இருந்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பட்டினப்பாக்கத்தில், எதிர்கால வணிகம், பொழுதுபோக்கு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் உள்ளது. இங்கு, வணிக மையம் அமைக்க, விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயலாக்க தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி வாரியம், இதுவரை 2.93 லட்சம் வீடு, மனைகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2.66 லட்சம் பேருக்கு, விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 5,450 வீடு, மனைகளுக்கு முழு தொகையும் செலுத்தப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் விற்பனை பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. முழு தொகையும் செலுத்தியவர்களுக்கு, உடனடியாக விற்பனை பத்திரம் வழங்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, முழு தொகையும் செலுத்தாத ஒதுக்கீட்டாளர்களுக்கும், ஒரு சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, முக்கிய நகரங்களை சுற்றி, துணை நகரங்களை உருவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் துறையால், நகரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஒருங்கிணைந்த நகரியங்களுக்கான விதிமுறைகளை உருவாக்கும் பணிகள் செயல்படுத்தபட்டுள்ளன.
வீட்டுவசதி வாரியத்தில் தற்போது, 11 ஆயிரத்து 497 மனைகள், 8,061 குடியிருப்புகள் விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில் இவற்றை விற்பனை செய்வதன் வாயிலாக, வாரியத்தின் நிதி நிலை மேம்படும் என்றும் வீட்டுவசதி வாரியத்தில், விற்பனையாகாமல் உள்ள வீடுகள், மனைகளை விற்பனை செய்ய, ஒரு விற்பனை பிரிவு, வருங்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:
Share your comments