கொரோனா, வறட்சி போன்ற காரணங்களால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம், மற்றும் தக்காளி விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
4 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி
இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஆண்டுக்கு 1.90 கோடி டன் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் விளைவிக்கப்படும் 1.15 லட்சம் ஹெக்டேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேரில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு மூன்று லட்சம் மெட்ரிக் டன் மாங்கூழ் தயாரிக்கவும், 1 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை ஜெகதேவி, சந்தூர், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அல்போன்சா, மல்கோவா, பெங்களூரா, தோத்தாபுரி, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடும் வறட்சியால் மாம்பழம் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சாகுபடியில் 70 சதவீதம் மட்டுமே பூக்கள் பூத்தது அதில் 25 சதவீதம் மட்டும் மாங்காய்கள் விளைந்துள்ளது.
வறட்சியால் மாங்காய் சாகுபடி குறைந்தாலும் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் தற்போது நிலவும் கொரோனா நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மாம்பழங்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இயலவில்லை. அதே போல் மாம்பழம் தட்டுபாடு உள்ள பகுதிகளுக்கும் எடுத்து செல்ல இயலவில்லை. ஒரு புறம் வறட்சியால் உற்பத்தி குறைவு மற்றொரு புறம் கொரோனா ஊரடங்கால் விற்பனை செய்வதில் சிக்கல் என மா விவசாயிகள் சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.
தக்காளி சாகுபடியும் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிபட்டினம், சூளகிரி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை, ராயகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடியாகும் தக்காளி ராயகோட்டை தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தமிழகம் முழுவதும் அனுப்பப்படுவதுடன் கர்நாடகா ஆந்திரா மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளி மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு தக்காளியை அனுப்பி வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாகச் சரிந்துள்ளது. ஊரடங்கு காரணமாக 25கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளில் 30ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதிகபட்சமாகக் கிலோ ரூபாய் 5 க்கு விற்கப்படுவதால் செடிகளில் தக்காளியை பறிக்கும் கூலி கூட கிடைப்பதில்லை.
இதனால் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுவதால் விவசாயிகள் தக்காளியைப் பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க...
அளிக்கும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்!!
Share your comments