கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்ததால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிப்பது குறித்து தலைமை செயலகத்தில் அலோசனை நடைபெறுகிறது.
ஆப்ரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து பயிர்களை சர்வ நாசம் செய்து வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்து. இதானால் தென் மாநில விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளி தாக்குதல்
இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்று தமிழக வேளாண்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி (VEPPANAPALLI)ஒன்றியத்திற்கு உட்பட்ட நேரலகிரி ஊராட்சியின் வாழைமரங்கள், எருக்கஞ்செடிகள், ஆமணக்கு செடிகளில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் நேற்று மாலை படர்ந்திருந்தன. இந்த வெட்டுக்கிளிகள் இருந்த செடிகளில் இலைகள் எதுவும் இல்லாமல் மொட்டையாக காட்சியளித்தன.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன, இது குறித்து வேளாண் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆக்கிரமித்துள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் தானா என்ற ஆய்வுகளை வேளாண் துறையினர் தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் அச்சம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், பயிர்களை ஒட்டுமொத்தமாக நாசப்படுத்த கூடிய வெட்டுக்கிளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த தகவலால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
இதுபோன்ற வெட்டுக்கிளிகளை இதற்கு முன்பு பார்த்ததே கிடையாது என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க..
வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்குமா? வேளாண் துறை விளக்கம்!!
கோவையில் வெட்டுக்கிளி தேடுதல் வேட்டை
இதேபோல் கேரள எல்லையை ஒட்டியுள்ள ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை வட்டாரங்களில், வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வேளாண் உதவி இயக்குனர் விஜய் கல்பனா கூறுகையில், நீலகிரி காந்தலுார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் இருப்பதாக விவசாயி தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டதாக கூறினார். அங்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, வெட்டுக்கிளி இனம் எதுவும் காணப்படவில்லை என்றும், 'கிராஸ்ஹோப்பர்' எனப்படும், சாதாரண வெட்டுக்கிளிகளில் ஒன்றிரண்டை மட்டுமே பார்க்க முடிந்ததாவும் தெரிவித்தார். இதனால் பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
இன்று ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து வேளாண்துறைச் செயலர் ககந்தீப் சிங் பேடி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வெட்டுக்கிளிகளை எப்படி கையாள்வது என்பது குறித்து அறிவிப்புகள் அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Share your comments