உரம் மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு என்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ போனில் தகவல் தெரிவிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) பரமேஸ்வரி தலைமை தாங்கினார். விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் கோரிக்கை (Farmers Request)
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மாவட்டத்தில் வேர்க்கடலை அதிகளவில் பயிர் செய்யப்படுவதால் விவசாயிகளின் நலன் கருதி கோவில்பட்டி போன்று நமது மாவட்டத்திலும் கடலைமிட்டாய் தொழிற்சாலை அமைக்க வேண்டும். சொட்டுநீர் பாசனம் கேட்டு மனு கொடுத்து 6 மாதமாகியும் இன்னும் பல விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. உடனே சொட்டுநீர் பாசனம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை 20 கோடி ரூபாய் உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும். தளவானுார் அணைக்கட்டை விரைந்து சீரமைக்க வேண்டும்.
குடிமராமத்து பணிகள் நடந்துள்ள ஏரிகளில் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். அதுபோல் குடிமராமத்து பணிகள் நடந்துள்ள ஏரிகளில் வாய்க்கால், மதகுகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தரமான விதைகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகளை அதிகம் உற்பத்தி செய்து சந்தை பகுதியில் விற்பனை செய்ய வேண்டும். திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு வர வேண்டிய பணம் ஒரு மாதமாகியும் வரவில்லை. கூட்டுறவு சங்கங்களில் உரம் தட்டுப்பாடாக உள்ளது. சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு தடையின்றியும், தட்டுப்பாடின்றியும் உரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பிரம்மதேசத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் கடந்த 10 ஆண்டுகளாக சரிவர செயல்படாமல் உள்ளது. அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உப்புவேலுாரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் டாக்டர் சரிவர வருவதில்லை. பிரம்மதேசத்தில் விவசாய மின்வேலியில் சிக்கி 3 பேர் இறந்துள்ளனர். சோலார் மின் வேலி அமைக்கும் திட்டமும் நிறுத்தப்பட்டு விட்டது. இனி இதுபோன்ற சம்பவம் ஏற்படாதவாறு காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தில் இருந்து விவசாய பயிர்களை காப்பாற்ற வனத்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
புகார் அளிக்க (For Complaint)
ஊரக வளர்ச்சித்துறையினர், கோட்ட அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான கூட்டத்திற்கும் வருவதில்லை. விவசாயிகள் எங்கே சென்று குறையை தெரிவிப்பது என ஆவேசமாக விவசாயிகள் பேசியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பூச்சி கொல்லி விற்பனை நடக்கிறது.
அதை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு பதில் அளித்த வேளாண் துறை அதிகாரிகள், உரம் மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு என்றோலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ வேளாண் உதவி இயக்குனரின் 99761 26021 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மேலும் படிக்க
ஆடிப்பட்டத்தில் நிலக்கடலை சாகுபடியை அதிகரிக்க சில யுக்திகள்!
Share your comments