உரக்கடைகளில் உரங்களை நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உரக்கடைகளின் உரிமம் (License) ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆய்வு
உரக்கடைகளில் 50 கிலோ மூட்டை டி.ஏ.பி. உரம் கூடுதல் விலையான ரூ.1,700 முதல் ரூ.1,900 வரை விற்கப்படுவதாக விவசாயிகள் மத்தியில் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் கூடுதல் விலைக்கே உரங்களை விற்கப்படுவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். இதனால் உரக்கடைகளில் நேரில் ஆய்வு (Inspection) செய்து சரியான விலைக்கே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுத்தினார்.
விவசாயிகள் புகார்
இதைத்தொடர்ந்து பெரும்பாலான கடைக்காரர்கள் சரியான விலைக்கு உரங்களை விற்பனை செய்யத் தொடங்கினர். ஆனாலும் குண்டடம் நகரில் உள்ள ஒரு உரக்கடையில் டி.ஏ.பி. உரம் மூட்டை ரூ.1,700-க்கு தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் மத்தியில் புகார் தெரிவிக்கப்பட்டது. நேற்று குண்டடம் பகுதியில் மேட்டுக்கடை, குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் உரக்கடைகளில் திடீரென வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) புனிதா, குண்டடம் வேளாண்மை உதவி இயக்குனர் பழனிகுமார் உள்ளிட்ட வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உரிமம் ரத்து
அப்போது குண்டடம் கோவை ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு செய்தபோது அங்கு வந்த விவசாயிகள் இந்த கடையில் மீண்டும் கூடுதல் விலைக்கே டி.ஏ.பி. உரம் விற்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடைக்காரருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், இனி இதுபோன்ற புகார்கள் நிரூபணம் செய்யப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். உடனடியாக அங்கிருந்த விவசாயிகளுக்கு டி.ஏ.பி. உரம் சரியான விலைக்கு வழங்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வை முடித்துக் கொண்டு கிளம்பியதும், அதன் பின்னர் அங்கு வந்த விவசாயிகளுக்கு டி.ஏ.பி. உரம் இல்லை என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் செல்போன் மூலம் இணை இயக்குனரைத் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். உடனடியாக மீண்டும் அந்த உரக்கடைக்கு வந்த அதிகாரிகள் கடைக்காரரை கடுமையாக எச்சரித்துவிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் டி.ஏ.பி. உரம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளிடம் பேசும்போது, விவசாயிகள் உரம் வாங்க வரும்போது முறையாக ஆதார் எண் (Aadhar Number) கொடுத்து வாங்க வேண்டும். வாங்கும் மூட்டைகளுக்கு உரிய ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். ரசீது இல்லாமல் உரங்களை வாங்கக் கூடாது. ஏதேனும் புகார்கள் (Complaints) இருந்தால் உடனடியாக வேளாண்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றனர்.
மேலும் படிக்க
3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
மேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
Share your comments