இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோ, களச் சோதனைகளுக்காக நானோ தொழில்நுட்பம் சார்ந்த உரங்களை குஜராத்தில் உள்ள, கலோல் ஆலையில் மத்திய வேளாண் இணை அமைச்சர் அறிமுக படுத்தினர். ரசாயன உரங்களின் பயன்பாட்டை 50% வரை குறைக்கும் என்றும், பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் இஃப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நானோ நைட்ரஜன், நானோ ஜிங்க் மற்றும் நானோ காப்பர் ஆகிய நானோ தொழில்நுட்பம் சார்ந்த உரங்களை அறிமுக படுத்தி உள்ளது. இது ரசாயன உரங்கள், யூரியா பயன்பாட்டைக் குறைப்பது, உற்பத்தியை பெருக்குவது, மண் வளத்தைப் பாதுகாப்பது மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தையும் இந்த நானோ தொழிநுட்ப உரங்கள் குறைக்கும் என இஃப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நானோ நைட்ரஜன் யூரியாவின் பயன்பாட்டை 50% குறைக்கும் என்றும், மண் வளத்தை பாதுகாக்க 10 கிராம் நானோ ஜிங்க் உரம் போதும் எனவும், நானோ காப்பர் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது. நானோ தொழில்நுட்ப உரங்களினால் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் (என்பிகே) உரங்களின் பயன்பாடு 50% வரை குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இஃப்கோ நிறுவனத்திற்கு சொந்தமான கலோல் தொழிற்சாலையில் உள்ள நானோ உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் செய்து இந்த உரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் விஞ்ஞான மையங்களின் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இந்த உரங்களின் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளது என இஃப்கோ தெரிவித்துள்ளது.
நானோ உரங்கள் பாரம்பரிய ரசாயன உரங்களின் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும் என்றும், விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் எனவும் இஃப்கோ தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாது கலப்பு உரங்களைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.
சிறப்பு விருந்தினர்களாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வேளாண் துறை இணையமைச்சர் பர்சோட்டம் ரூபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். அதே போன்று இந்தியா முழுவதிலுமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments