இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிகப்பெரிய உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோவின் நானோ டிஏபியின் புதிய தொழில்நுட்பத்தைப் பாராட்டியுள்ளார். மேலும் இது நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எளிமைப்படுத்தும் கேம் சேஞ்சர் என குறிப்பிட்டுள்ளார்.
இஃப்கோவின் நானோ டிஏபிக்கு மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல் அளித்து, வெள்ளிக்கிழமையன்று உரக்கட்டுப்பாட்டு ஆணையில் (fertilizer Control Order-FCO) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவை, இந்தியா உர உற்பத்தியில் தன்னிறவு அடைய வழி பிறந்துள்ளது. நானோ யூரியாவுக்கு பிறகு, இந்திய அரசு தற்போது நானோ டிஏபிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் இது விவசாயிகளுக்கு மகத்தான நன்மைகளை அளிக்கும். இனி டிஏபி பாட்டில் வடிவிலும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சரின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, விவசாய சகோதர சகோதரிகளின் வாழ்க்கையினை எளிதாக்குவதற்கான ஒரு முக்கியமான நகர்வு இது என பாராட்டியுள்ளார். மேலும் இது நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எளிமைப்படுத்தும் கேம் சேஞ்சர் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வார்த்தைகளுக்கு IFFCO நிறுவனத்தின் நிர்வாக தலைமை செயலாளர் அவஸ்தி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இஃப்கோ நானோ டிஏபிக்கு எங்களை ஊக்கப்படுத்திய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி. இஃப்கோவின் நானோ உரமானது மண் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நானோ டிஏபி உற்பத்திக்கான ஆலைகள் பரதீப், கலோல் மற்றும் காண்ட்லாவில் அமைக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜூலை முதல் உற்பத்தி தொடங்கப்பட உள்ளதாகவும் அவஸ்தி தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள IFFCO-வின் காலோ யூனிட்டில் 250 கோடி ரூபாய் செலவில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது, அது முழுவதுமாக தானாகவே இயங்கும். ஒரு நிமிடத்தில் 150 அரை லிட்டர் பாட்டில்களை தயாரிக்க முடியும்.
யூரியாவுக்கு அடுத்தப்படியாக நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படு உரம் டிஏபி ஆகும். புதிதாக உருவாக்கப்பட்ட இஃப்கோ நானோ டிஏபி, வழக்கமான டிஏபியுடன் ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், அரசு உரத்திற்கு வழங்கி வரும் மானியத்தையும் குறைக்கும். ஒரு பாட்டில் நானோ டிஏபியின் விலை சுமார் 600 ரூபாய் என்று கூறப்படுகிறது.
தற்போது, மானிய விலையில் வழக்கமான டிஏபியின் விலை ரூ.1,350 ஆகவும், ஒரு பையின் உண்மையான விலை ரூ.4,000 ஆகவும் உள்ளது. அதிகளவில் உர மானியத்தொகையாக அரசு வழங்கிவரும் நிலையில் தற்போதைய நானோ டிஏபி ஒப்புதல் உத்தரவின் மூலம் அரசின் செலவினம் பெருமளவில் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் விவசாயிகள் கோதுமை பயிர்களுக்கு நானோ டிஏபியைப் பயன்படுத்தினர். ஹனுமன்கரில் உள்ள பார்லி பயிரிலும் இது முயற்சிக்கப்பட்டது. நல்ல முடிவுகளை நானோ டிஏபி தந்துள்ள நிலையில் அதற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
மதுரையில் முதல்வர்- கோரிக்கைகளை அடுக்கிய தென் மண்டல மாவட்ட விவசாயிகள்
சாரஸ் மகளிர் சுய உதவிக்குழுவின் உற்பத்தி பொருள் கண்காட்சியை தொடங்கிவைத்த உதயநிதி
Share your comments