தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், காற்றின் திசை மற்றும் வலு, காலநிலைக்கு ஏற்ப வெயிலின் தாக்கம் தொடர வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் இந்த கோடைக்காலத்தில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், மே மாதத்தில் இது தொடரும் எனவும், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் வெயில் இயல்பை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
தமிழ்நாட்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட மே மாதத்தில் கிடைக்கப்பெற்ற கோடை மழை மற்றும் அசானி புயல் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான வானிலை நிலவுவதன் காரணமாக தமிழ்நாட்டில் கோடை மழை படி படியாக குறைந்து வருகிறது.
மழைக்கான வாய்ப்பு குறையும் வேளையில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது கிழக்கு திசையில் இருந்து தமிழ்நாடு நிலபரப்பிற்குள் வரும் காற்று போதிய வலுவில்லாததால், உணர்வெப்பம் அதிகரித்து, வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
குறிப்பாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இதன் காரணமாக வெப்பநிலையில் இயல்பை விட 1℃ -2℃ வரை வெப்பம் அதிகமாக பதிவாகி உள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்கு இதே நிலை தொடரும் என்பதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மேலும் படிக்க:
9ம் தேதி வரை இந்த மாநிலங்களில் கடுமையான வெப்ப அலைகள் - விபரம் உள்ளே!
ஏப்ரல் 10 வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல்!
Share your comments