நடைமுறையில் உள்ள மீன்பிடி தடைக் காலத்தை வருகிற 31-ம் தேதியுடன் நிறைவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் மீன்வர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை உள்ள 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் கருவுற்ற மீன்கள், மீன் குஞ்சுகள் வலைகளில் சிக்கிக் கொண்டால் இனப்பெருக்கம் பாதிக்கப்படும், என்பதால் இக்காலகட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டு அவை மீன் பிடி தடை காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் காரணமாகக் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக, வழக்கமான மீன்பிடி தடை காலத்தின் 17 நாட்காளுக்கு முன்பே மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, இந்த காலகட்டத்தையும் மீன்பிடி தடை காலமாகக் கருத வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகளும், தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, மீன்பிடி தடை காலத்தை வழக்கமான 61 நாட்களிலிருந்து 47 நாட்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்தமான் நிக்கோபரை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்கக் கடல் மீன்பிடி தடை காலத்தின் அளவு 61 நாட்களிலிருந்து 47 நாட்களாகக் குறைக்கப்படுகிறது. அதே போன்று லட்சத்தீவை உள்ளடக்கிய மேற்கு கடல் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31 வரை 47 நாட்களாகத் தடை காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுத்தாகவும், இந்த ஆண்டுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் வரும் 1–ந்தேதி முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மத்திய அரசின் இந்த உத்தரவு மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Daisy Rose Mary
Krishi Jagran
Share your comments