கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கிரிவலப் பாதை சென்று திரும்பி வர 40 மினிபஸ்களை பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு இருந்தார்.
இதன்படி சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் (Trips) பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது என அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகளை பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள்/மார்க்கம் ஆகிய விவரம் பின்வருமாறு:
- வேலூர் ரோடு - Anna Arch : போளூர், வேலூர், ஆரணி. ஆற்காடு, செய்யாறு (மார்க்கம்)
- அவரலூர்பேட்டை ரோடு -SRGDS பள்ளி எதிரில்: சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் (மார்க்கம்)
- திண்டிவனம் ரோடு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: செஞ்சி. திண்டிவனம். புதுச்சேரி, தாம்பரம். அடையாறு, கோயம்பேடு (மார்க்கம்)
- வேட்டவலம் ரோடு - சர்வேயர் நகர்: வேட்டவலம், விழுப்பரம் (மார்க்கம்)
- திருக்கோயிலூர் ரோடு-ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், (அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர்): திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர்,சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி (மார்க்கம்)
- மணலூர்பேட்டை ரோடு - செந்தமிழ் நகர்: மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை (மார்க்கம்)
- செங்கம் ரோடு - அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன்: செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர் (மார்க்கம்)
- காஞ்சி ரோடு டான் பாஸ்கோ பள்ளி: காஞ்சி, மேல்சோழங்குப்பம் (மார்க்கம்)
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்துதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
உட்கார்ந்த இடத்தில் நில அளவைக்கு விண்ணப்பிக்கவும்- சூப்பர் அறிவிப்பு
SBI junior associates: 8424 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு- முழுவிவரம்
Share your comments