திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் அம்மை நோய் தாக்குதலால் ஆடுகள் உயிரிழப்பது விவசாயிகளின் கவலைகளை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளை போலவே, ஆடு, மாடுகளை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றுப்படுகைகள் உள்ளிட்ட மேய்ச்சலுக்கு உகந்த பகுதிகள் கால்நடை வளர்ப்புக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில மாதங்களாகவே நாங்குநேரி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்பட்டு இறப்புகள் நேர்ந்து வருவதால் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.
வீரவநல்லூர் அருகே வெள்ளாங் குளியில் ஆடு வளர்க்கும் கே.சேது கூறுகையில், ஆட்டம்மை நோய் தாக்குதலால் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் இதுவரை இருந்துள்ளன. நோய் தாக்குதலுக்கு உள்ள ஆடுகள் சரிவர மேய்வதில்லை. மூக்கில் சளி வடிவதால் மற்ற ஆடுகளும் நோய் பாதிப்பகளுக்கு சிக்கிக்கொள்கின்றன. கால்நடைத்துறை சார்பிலிருந்து தடுப்பூசிகள் போடப்பட்டும் பயன் எதுவும் ஏற்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
இதுபோல், அம்பாசமுத்திரம் அருகே செம்பத்திமேடு பகுதியில் அம்மை நோய் தாக்குதலால் ஏராளமான ஆடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்குமுன் நாங்குநேரி பகுதியில் நோய் பரவலால் ஏராளமான ஆடுகள் திடீரென்று இறந்தன.
இதுகுறித்து, கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில் மாவட்டத்தில் ஆட்டம்மை நோய் பாதிப்புள்ள வட்டாரங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது. நோய் தாக்குதல் குறித்த தகவல் வந்தவுடன் அப்பகுதிகளுக்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவகை வைரஸ் காரணமாக ஆடுகளுக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஆடுகளை தனிமைப்படுத்தி வைப்பது நன்று. பாதிப்புக்குள்ளான ஆடுகளின் உடலின் மேற்பகுதியில் கொப்பளங்கள் உருவாகினால் ஓரளவுக்கு அவற்றை பிழைக்க வைத்துவிடலாம்.
ஆனால், உடலின் உள் பகுதியில் நுரையீரல் பகுதிகளில் கொப்பளங்கள் உருவானால் அவற்றை குணமாக்குவது கடினமாகிவிடுகிறது. நோய் தாக்குதலுக்குப்பின் ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவதை விட முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் முன்வர வேண்டும். ஆனால், இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. கால்நடைகளுக்கு வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று கூறினார்.
ஆட்டம்மை நோய் தாக்குதலுக்கு முன்னரே ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் அறிவுறுத்தல்.
மேலும் படிக்க:
ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய்! அருமையான தொழில் வாய்ப்பு!
ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி துணையுடன், ஆடுகளுக்கான புதிய செயலி அறிமுகம்
Share your comments