கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள் விற்பனை செய்யபடுவதாக மாநில உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தொடர் புகார்கள் வந்த நிலையில்,
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, ராமராஜ், ஏழுமலை, கடை நிர்வாக குழு ஊழியர்கள் உட்பட 10 பேர் திங்கள்கிழமை காலை 4 மணி முதல் சந்தையில் தீவிர சோதனை நடத்தினர்.
50க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 30 கடைகளில் நச்சு இரசாயனங்கள் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை கண்டுபிடித்த அதிகாரிகள், சுமார் 5 டன் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களையும், 2 டன் வாழைப்பழங்களையும் பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்ததாவது, ""சில வியாபாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை நச்சு ரசாயனங்களை பயன்படுத்தி விற்பனை செய்கின்றனர். தொடர்ந்து விதிகளை மீறும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பழங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இயற்கை முறையில் மாம்பழங்களை எப்படி பழுக்க வைப்பது என்பது குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இயற்கை முறையில் பழுத்த பழங்களை கண்டறிவது எப்படி என்று விளக்கி உள்ளார். அவர் கூறிய குறிப்புகளை பின்வருமாறு காண்போம்.
1, பழக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மாம்பழங்கள் அணைத்தும் ஒரே நிறத்தில் மென்மையாக காணப்பட்டால் அவை செயற்கை முறையில் பழுத்திருக்கலாம்.
2, மாம்பழங்களை எடுத்து முகர்ந்துபார்த்தால் மாம்பழத்திற்கே உரிய அந்த இயற்கையான நறுமணம் அதில் துளியளவும் வராது.
3, வாங்கிய பின் வீட்டிற்கு வந்தவுடன் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி அதில் அந்த மாம்பழங்களை கொட்டினால் செயற்கை முறையில் பழுத்திருந்வை என்றால் கார்பைடு என்ற நச்சப்பொருள் உட்கலந்திருப்பதால் அவை மேல்மட்டத்தில் மிதக்கும்.
4, இயற்கை முறையில் பழுக்க பட்டிருந்தால் அவை நீருக்குள் மூழ்கிவிடும்.
5, செயற்கை முறையில் பழுத்திருந்த மாம்பழங்களை நறுக்கும் பொழுது மாங்காய்களை நறுக்குவதுபோல் நரநரப்பாக இருக்கும் ஏனெனில் அவை மஞ்சள் நிறத்தில் இருக்கும் மாங்காய்களே.
6, செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களின் விதையை சுற்றியுள்ள சதைப்பகுதி வெண்ணிறமாக இருக்கும்.
7, மாம்பழங்கள் 5 படிகளாக பழுக்கும், அடிப்பகுதியில் இருந்து நுனி காம்பு பகுதி வரை 5 படிகளாக பழுக்கும், இதனால் அவை முழுவதும் ஒரே நிறத்தில் தென்படாது , இவ்வாறு கலந்த நிறங்களில் இருந்தால் அவை இயற்கையாய் பழுக்கப்பட்டவைகளாகும்.
8, செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களின் சுவை மாம்பழங்களுக்குரிய இயற்கையான சுவையில்லாமல் புளிப்பான சுவையில் இருக்கும்.
இவ்வாறு நாம் மாம்பழங்கள் செயற்கையாய் பழுக்கப்பட்டவைகளா அல்லது இயற்கையாக பழுக்க பட்டவைகளா என்பதை அறிந்து கொள்ளலாம்.
இயற்கை உணவுகளை இவ்வளவு சோதனை செய்து கண்டறிந்து உண்ணும் வாழ்க்கைமுறையிலும் சமுதாயத்திலும் வாழ்கிறோம் என்பது வேதனைக்குரிய ஒன்றே. நல்ல இயற்கை உணவுகளை உண்டு மக்கள் அனைவரும் இன்பமாக வாழுங்கள்.
மேலும் படிக்க
குளிர்பானம், பழச்சாறு கடைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை- காரணம் இது தான்..
பள்ளிகளில் ”விவசாயம்” ஒரு பாடமாக சேர்ப்பு- பாடத்திட்டத்தை தயாரிக்க குழு!
Share your comments