மோர்கன் ஸ்டான்லி எனும் நிதிச் சேவைகள் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், 2022 - 23 நிதியாண்டில் ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என கூறியுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்தியப் பொருளாதாரம் (India's Economy)
ஆய்வு தொடர்பாக மோர்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பொருளாதாரம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்படும் வகையில் அமைந்துள்ளது. இந்தியா குறித்து நாங்கள் ஆக்கப்பூர்வமான கண்ணோட்டம் கொண்டுள்ளோம். சமீபத்திய வலுவான தரவுகள் எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்தியா உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதில் சிறந்த நிலையில் உள்ளது. ஆசிய பொருளாதாரத்தின் புறத்தேவைகளுக்கான வளர்ச்சி பலவீனமடையும் நிலையில், இந்தியாவின் இந்த நிலை முக்கியமானதாக இருக்கும்.
அந்த வகையில் இந்தியா கட்டமைப்பு மாற்றத்தினை மேற்கொள்ள வேண்டும். அது பொருளாதார உற்பத்தித் திறனை உயர்த்துவதை நோக்கமாக கொண்ட தெளிவான கொள்கை மாற்றமாக இருக்க வேண்டும். ஏற்கனவே அரசு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். அது தனியார் முதலீட்டினை ஊக்குவிக்கும், வலுவான உற்பத்தித்திறனாக மாற வழி ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலைகள் குறைந்து வருவதால் இந்த நம்பிக்கை ஏற்படுகிறது. கச்சா எண்ணெய் மற்றும் கமாடிட்டிகளின் விலைகள் மார்ச் 2022 உச்சத்திலிருந்து 23 - 37 சதவீதம் சரிவடைந்துள்ளது.
மேலும் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதாரம் முழு வேகத்தில் இயங்குவதும், பொருளாதார மீட்சிக்கு உதவியது. கோவிட்டிற்கு முந்தைய நிலையை விட தேவை அதிகரித்துள்ளது. அனைத்து நிலைகளிலும் இதனை காண்கிறோம். இது ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்த வேண்டிய அவசியமில்லை.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மேக்ரோ பொருளாதார நிலைமையை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி உள்நாட்டு தேவை வளர்ச்சியை குறைக்க தேவையில்லை. குறுகிய கால கண்ணோட்டத்தில் அரசு தனியார் முதலீட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தாமல், வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் முயற்சியில் இறங்குவது முக்கிய ஆபத்தாக ஆக இருக்கும்.
ஏற்றுமதியை பொருத்தவரை ஆசியாவின் மற்ற நாடுகளை போலவே இந்தியாவிலும் அது குறையும். இருப்பினும் பொருட்கள் ஏற்றுமதியை விட சேவைத்துறைகளின் ஏற்றுமதி சிறப்பாக இருக்கும். இது ஒரு தணிக்கும் காரணியாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் படிக்க
நிதிச் சுமையை குறைக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்!
இலவசங்களை அளிப்பதால் நாடு தன்னிறைவு பெறாது: பிரதமர் மோடி பேச்சு!
Share your comments