இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நிலக்கரி ஆலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில் நிலக்கரி வாயிலான மின்சார உற்பத்தி மட்டுமே சுமார் 70 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஆனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான போதிய நிலக்கரி இருப்பில் இல்லாததால் மின்சார உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டு அது மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் இந்தப் பிரச்சினை நீடித்து வந்தது.
நிலக்கரி உற்பத்தி (Coal Production)
அதிகமான அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டாலும், அது மின்சார உற்பத்திக்குப் போதுமான அளவில் இல்லை. அதுவும் கோடைக்காலத்தில் மின்சாரப் பயன்பாடு அதிகமாகவே இருக்கும் என்பதால் இக்காலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று அஞ்சப்பட்டது. ஓரளவுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் இந்தியாவில் இப்போது நிலக்கரி தட்டுப்பாடு குறைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 8.27 சதவீதம் அதிகரித்து 58.33 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 53.88 மில்லியன் டன்னாக இருந்தது.
2022 ஆகஸ்ட் மாதத்தில், கோல் இந்தியா மற்றும் இதர பெரிய நிலக்கரி சுரங்கங்கள் முறையே, 46.22 மில்லியன் டன் மற்றும் 8.02 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து 8.49 சதவீதம் மற்றும் 27.06 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இருப்பினும், இந்திய அரசுக்குச் சொந்தமான சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 17.49 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி சுரங்க நிறுவனங்களில் 25 சுரங்கங்கள் 100 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதேசமயம், 5 சுரங்கங்களின் உற்பத்தி அளவு 80% முதல் 100% வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி விநியோகத்தைப் பொறுத்தவரையில், 2022 ஆகஸ்ட் மாதத்தில் 63.43 மெட்ரிக் டன் நிலக்கரி சப்ளை செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் நிலக்கரி விநியோகம் 60.18 மில்லியன் டன்னாக இருந்தது. இது 5.41 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும் படிக்க
கனமழையால் பயிர்கள் சேதம்: உதவுமா தமிழக அரசு?
தேங்காய் விற்பனையில் குவியும் வருமானம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
Share your comments