இந்தியாவைச் சேர்ந்த பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் சேர்ப்பதும், அங்கு குடியேறி வருவதும் அதிகரித்து வருகிறது. மேலும், அவர்கள் அங்கேயே தொழில் செய்யவும் விரும்புகின்றனர். இந்த ஆண்டுக்குள் இந்தியாவைச் சார்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும், அங்கேயே அவர்கள் குடியேறத் தயாராகி வருவதாகவும் ஹென்லி குளோபல் சிட்டிசன்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டில் குடியேறுதல் (Immigration abroad)
இரஷ்யா - உக்ரைன் போர்நீடித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் தவித்து வருகின்றனர் இரஷ்ய தொழிலதிபர்கள். இவர்கள் விமானத்தில் பறக்கத் தயாராக உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கும், இரஷ்யப் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட உக்ரைனும், டாப் 5 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உயர்வான வாழ்க்கைத் தரம், சிறப்பான கல்வி, மருத்துவ வசதிகள், இந்தியாவில் உள்ள கடுமையான சொத்துக்கள் மற்றும் தனிநபர் வரியை செலுத்துவதில் இருந்து விடுபடுதல் ஆகிய காரணங்களால், இந்திய பணக்காரர்கள் வெளிநாடு செல்ல விரும்புவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கோடீஸ்வரர்களின் இடம் பெயர்வு பற்றிய மதிப்பாய்வு 2022 அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கீழ்க்கண்ட சிறப்பம்சங்கள் இடம்ற்றுள்ளது.
இழப்பு இல்லை (No loss)
இந்திய நாட்டிற்கு கோடீஸ்வரர்களின் இழப்பு மிகப்பெரிய கவலையை அளிக்க கூடியதல்ல. ஏனெனில் இழந்த கோடீஸ்வரர்களை விடவும், பல புதிய கோடீஸ்வரர்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி வருகிறது இந்தியா. உள்ளூர் நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டு வரும் வலிமையான வளர்ச்சியால், 2031 ஆம் ஆண்டுக்குள் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 80% அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவை, உலகின் அதிவேகமாக வளரும் பணக்கார சந்தைகளில் ஒன்றாக மாற்றும்.
அதேசமயம், உலகின் செல்வச்செழிப்பின் மையமாக உருவெடுத்து வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இந்த நாட்டைத் தவிர ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, போர்ச்சுகல், கிரீஸ், கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள், கோடீஸ்வரர்களின் தேர்வுப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளது. ஐரோப்பிய யூனியன், துபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் குடியேற விரும்புகிறார்கள். ஏனெனில், வரி விதிப்பு மற்றும் வலிமையான பாஸ்போர்ட் ஆகியவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. மேலும் ஐ.டி, துறையைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள் மற்றும் குடும்ப அலுவலகங்கள் அமைப்பதற்கும் சிங்கப்பூர் சரிமான இடம் என கருதுகின்றனர். மிக எளிமையான விசா நடைமுறை மற்றும் பல வாய்ப்புகளை வழங்கி வருவதால் துபாய் கோல்டன் விசா வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.
மற்ற சில முதலீட்டாளர்கள் ஐரோப்பிய யூனியன் மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் குடியேற விரும்புகின்றனர். குறிப்பாக போர்ச்சுகல், மால்டா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளனர். உயர்வான வாழ்க்கைத் தரம் மற்றும் குறைவான இடவசதி போன்றவை முக்கியம் என கருதும் இந்தியக் குடும்பங்கள், தொழிலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் நுழைய, இது நுழைவுச் சீட்டாக அமையும். வருங்கால முதலீட்டாளர்கள் அதிகளவில் விரும்பும் நாடாக துபாய் விளங்குகிறது என, உலக கோடீஸ்வரர்களின் இடம் பெயர்வு மதிப்பாய்வு 2022 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இந்திய வம்சாவளி தமிழ் மாணவிக்கு ஃபுல்பிரைட் விருது!
வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: டெபாசிட் வட்டி உயர்வு!
Share your comments