43 நாட்களில் கட்டப்பட்டது இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் நிலையம், பெங்களூரில் இன்று திறக்கப்பட்டது
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஐஐடி மெட்ராஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் லார்சன் & டூப்ரோ லிமிடெட் மூலம் கட்டப்பட்ட தபால் நிலையத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் நிலையத்தை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
மத்திய அமைச்சரால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட தபால் அலுவலகம், அதன் காலக்கெடுவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, வெறும் 43 நாட்களில் முடிக்கப்பட்டது. கட்டுமானப் பொறியியல் துறையின் கட்டிடத் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமான மேலாண்மைப் பிரிவின் பேராசிரியர் மனு சந்தானத்தின் வழிகாட்டுதலின் கீழ் ஐஐடி மெட்ராஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் லார்சன் & டூப்ரோ லிமிடெட் அதன் கட்டுமானத்தை மேற்கொண்டது.
“பெங்களூரு எப்போதும் இந்தியாவின் புதிய அவதாரத்தை நிறுவிக்கும் நகரமாக உள்ளது. இந்த 3டி அச்சிடப்பட்ட தபால் நிலைய கட்டிடத்தின் அடிப்படையில் நீங்கள் இன்று பார்த்த புதிய அவதாரம், அதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சி. அந்த உணர்வோடுதான் நம் நாடு இன்று முன்னேறி வருகிறது” என்று அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.
தபால் அலுவலகம் 1,021 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் கட்டுமானமானது 3D கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது, இது ஒரு முழுமையான தானியங்கி கட்டிடக் கட்டுமானத் தொழில்நுட்பமாகும், இதில் ஒரு ரோபோடிக் பிரிண்டர் அனுமதிக்கப்பட்ட வடிவமைப்பின்படி கான்கிரீட் அடுக்கை அடுக்கி வைக்கிறது.
தர கான்கிரீட் (grade concrete) - இது விரைவாக கடினமாகும் இயல்பை கொண்டுள்ளது - கட்டமைப்பை அச்சிடும் நோக்கத்திற்காக அடுக்குகளுக்கு இடையில் பிணைப்பை விரைவாக உறுதிப்படுத்த இது பயன்படுகிறது.
L&T செயல்பாட்டுத் தலைவர் (தெற்கு மற்றும் கிழக்கு) ஜார்ஜ் ஆபிரகாம் இது குறித்து தெரிவித்ததாவது, “முன் பதிவேற்றம் செய்யப்பட்ட வடிவமைப்புகளை உள்ளடக்கிய ரோபோவின் உதவியின் காரணமாக, எங்களால் முழு கட்டுமான நடவடிக்கைகளையும் 43 நாட்களில் முடிக்க முடிந்தது. வழக்கமான முறையில் கட்டுமானம் செய்யப்பட்டிருந்தால் சுமார் 6-8 மாதங்கள் ஆகியிருக்கும் என்று தெரிவித்தார்.
23 இலட்சம் செலவில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது, இது வழக்கமான முறைகளில் உள்ள செலவை விட 30-40 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
வெள்ளம் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலி!
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு! விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments