Flying Car
சென்னையைச் சேர்ந்த ‛வினதா ஏரோமோபிலிட்டி' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார் மாதிரியை அறிமுகப்படுத்தி உள்ளது.
பறக்கும் கார்
பறக்கும் கார் மாடலுக்கு ‛வினதா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த பறக்கும் கார் மாடல் ஒரு முன்மாதிரியாக மாறலாம் என கணிக்கப்படுகிறது. பறக்கும் கார் மாதிரியில் எட்டு ஆக்சியல் ரோட்டர்கள் மற்றும் உயிரி எரிபொருளில் இயங்கும் ஹைப்ரிட் மோட்டார்கள் மற்றும் பேட்டரிகள் உள்ளன. இதன் மொத்த எடை 900 கிலோ ஆகும். 250 கிலோ எடையுடன் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதனை மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: விரைவில் ‛‛ஆசியாவின் முதல் பறக்கும் கார்‛‛ ஆக மாறும் வினதா ஏரோமொபிலிட்டியின் இளம் குழுவினர் உருவாக்கிய ஹைப்ரிட் பறக்கும் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பயன்பாட்டிற்கு வரும் போது மக்களையும், சரக்குகளையும் கொண்டு செல்லவும் பயன்படும். மருத்துவ அவசர சேவைகளுக்கு பயன்படும். குழுவினருக்கு வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
ஸ்டார்ட் அப்
ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சி.இ.ஓ., யோகேஷ் ஐயர் கூறுகையில், தீவிர ஆலோசனைக்கு பிறகே, ‛வினதா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து பறவைகளின் தாய் என்று அர்த்தம். ‛வினதா' என்ற பெயர் பண்டைய புராணத்தில் இருந்து வந்தது. பறக்கும் கார் தொடர்பான ஆய்வில் நாங்கள் இருக்கிறோம். எனவே, நிறைய ஆராய்ச்சிகள் செய்து, அதற்கு பிறகே,‛வினதா' என பெயர் சூட்டினோம். இதற்கு பறவைகளின் தாயார் என பொருள்படும். துல்லியமாக கூறினால் கருடனின் தாயார் எனக்கூறலாம்.
இது இரண்டு இறக்கைகள் கொண்டதாக இருக்கும்.
உயிர் எரிபொருளில் இயங்குவதுடன் செங்குத்தாக கீழிருந்து மேலே கிளம்பி, அதேபோன்று தரையிறங்கும் வசதி கொண்டது. எந்த இடத்திலும் தரையிறக்கவும், புறப்பட வைக்கவும் முடியும். சமீபத்திய டுரோன் கொள்கைகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. இதன் மூலம் இந்தியா, டுரோனின் மையமாக மாறும். எங்களது தயாரிப்பு ‛மேட் இன் இந்தியா'வின் (Made In India) சின்னமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதனால் தான், இந்த மாதிரியை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், நமது மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் மூலம் அறிமுகப்படுத்தினோம்.
ஹெலிடெக் எக்ஸ்போவிற்கு பிறகு பறக்கும் காருக்கான சோதனை துவக்கப்படும். வரும் 2023ம் ஆண்டுக்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
மேலும் படிக்க
Share your comments