மத்திய அரசின் காப்பீடு மற்றும் பாலிசித் திட்டங்களில் பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். காப்பீடு மற்றும் பாலிசி தொடர்பான புகார்களை (Complaints) அளிக்க நேரடியாக சென்று அளிக்க வேண்டி இருந்தது. இதனை தற்போது மாற்றி அமைத்துள்ளது மத்திய அரசு. இனி, காப்பீடு (Insurance) மற்றும் பாலிசிதாரர்கள், ‘ஆன்லைன்’ மூலமாக புகார்களை வழங்க முடியும். அது மட்டுமின்றி; ஆன்லைன் மூலமாகவே, நாம் அளித்துள்ள புகார்களின் நிலையை (Complaint Status) கண்காணிக்கவும் முடியும்.
காப்பீடு விதியில் திருத்தம்:
மத்திய அரசு, ‘காப்பீட்டு குறைதீர்ப்பாளர் விதி 2017’ல் (Insurance Criticism Rule 2017) மாற்றங்கள் மேற்கொண்டதை அடுத்து, இத்தகைய வசதிகள் பாலிசிதாரர்களுக்கு கிடைக்க இருக்கின்றன. இது குறித்து, நிதிஅமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, நிவாரணம் வழங்குவதற்கான செலவுகள் குறைக்கப்பட்டு, செயல்திறன் அதிகரிக்கப்படும். மேலும், திருத்தப்பட்ட விதிகளின் கீழ், குறைதீர்ப்பாளர், தேவைப்படும் பட்சத்தில், காணொலி மூலமாகவும் விசாரணையை மேற்கொள்ள முடியும். அத்துடன் காப்பீட்டு முகவர்களும் (Insurance Agent) குறைதீர்ப்பாளர் வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
ஆன்லைனில் புகார்:
இதற்கு முன், பாலிசிதாரர்களுக்கு ஏதாவது சச்சரவுகள் இருந்தால் மட்டுமே, குறைதீர்ப்பாளரை அணுக முடியும். இதை மாற்றி, காப்பீட்டாளர்கள், முகவர்கள், தரகர்கள் மற்றும் பிற இடைத்தரகர்களின் தரப்பில், சேவை (Service) குறைபாடுகள் இருந்தாலும், புகார் வழங்க முடியும் என்ற அளவுக்கு, விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இனி இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் புகார் அளிக்கலாம். இதன்மூலம் பொதுமக்களின் நேரமும், பயணமும் மிச்சமாகும் என்று நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ அறிக்கையின்படி, காப்பீட்டு பாலிசிகள் தவறாக விற்பனை செய்யப்படுவது சம்பந்தமான புகார்கள், அதிகரித்து வருகின்றன. அதே சமயம், புகார் தந்தவருக்கு சாதகமான தீர்ப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.இந்நிலையில், இந்த சட்ட திருத்தங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக, காப்பீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Krishi Jagran
R.V. Balakrishnan
Read More
அரசு பள்ளி ஆசிரியர் விளைவித்த பாரம்பரிய நெல்லை அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்கள்
தென்னையில் ஊடுபயிராக சணப்பை சாகுபடி! மண்வளம் பெருகி மகசூல் அதிகரிக்கும்!
Share your comments